வாணியம்பாடி அடுத்த நெக்குந்தியில் அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் குடிநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலைக்கு சீல் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

வாணியம்பாடி, ஜூன் 18: வாணியம்பாடி அடுத்த நெக்குந்தியில் அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் குடிநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். வாணியம்பாடி அடுத்த நெக்குந்தியில் வசித்து வரும் ராஜிவ்காந்தி என்பவருக்கு சொந்தமான தண்ணீர் சுத்தரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சுத்திகரிக்கப்படும் தண்ணீர் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு கேன்களில் நிரப்பப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட அடி ஆழத்தில் போர் போட்டு தண்ணீர் உறிஞ்சப்படுவதால் அருகில் உள்ளவருக்கு தண்ணீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இதனால், சுற்றுப்புற விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பேரில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், நேற்று ஜோலார்பேட்டை பிடிஓ கனகராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் நெக்குந்தியில் இயங்கிவரும் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு தொழிற்சாலையையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அரசு அனுமதி பெறாமல் தண்ணீர் சுத்திகரிப்பு தொழிற்சாலை இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் தொழிற்சாலையை மூடி சீல் வைத்தனர். அப்போது விஏஓ சாந்தி மற்றும் போலீசார் உடன் இருந்தனர். தொழிற்சாலை சீல் வைக்கப்பட்ட தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: