நோயாளி நலச்சங்க நிதியில் கேமரா பொருத்தப்பட்டதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு மாவட்ட சுகாதாரத்துறை விசாரணை

தேனி, ஜூன் 13: தேனி மாவட்டத்தில் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் நலச்சங்க நிதியில் இருந்து கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தேனி மாவட்டத்தில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த சுகாதார நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதற்கு உரிய நிதியை வழங்கவில்லை. எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் நலச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் இருந்து கண்காணிப்பு கேமரா பொறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நோயாளிகள் நலச்சங்க நிதியை வேறு வகையான பயன்பாட்டிற்கு பயன்படுத்தினால், அதற்கு சங்க கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அனுமதி பெற வேண்டும். பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் கூட்டப்படுவதே இல்லை. மாறாக நிர்வாகமே கண்காணிப்பு கேமரா பொருத்த இச்சங்க நிதியை பயன்படுத்தி உள்ளது. தரம் குறைவான கம்பெனியிடம் டெண்டர் விட்டு சில ஆயிரம் ரூபாய் செலவில் கேமரா பொருத்தி விட்டு, பல ஆயிரம் ரூபாய் செலவானதாக கணக்கு எழுதி உள்ளனர்.

இந்த வகையில் தேனி மாவட்டத்தில் மட்டும் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் பெற்று ஆதாரங்களை வைத்துள்ளோம். இவ்வாறு கூறினர். இதுகுறித்து தேனி மாவட்ட சுகாதார துணை இயக்குனர் வரதராஜன் கூறியதாவது: நான் வந்த பின்னரே ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுத்தேன். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் தேவைக்கு ஏற்ற வகையில் கேமராக்களை பொறுத்தி உள்ளனர்.

ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் வெவ்வேறு வகையான நிதிகள் செலவிடப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எனக்கும் தகவல் வந்தது. நானும் விசாரணை நடத்தி வருகிறேன். முதல் கட்டமாக கண்காணிப்பு கேமரா பொருத்த நோயாளிகள் நலச்சங்க நிதியை அனுமதியின்றி எடுத்து செலவிட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். முறைகேடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Related Stories: