ராசிபுரம் அருகே கார் மோதி பள்ளி மாணவி பலி

நாமகிரிப்பேட்டை,  ஜூன் 13: ராசிபுரம் அருகே, சாலையில் நடந்து  சென்ற போது, கார் மோதிய விபத்தில் 8ம் வகுப்பு மாணவி பலியானார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த தண்ணீர்பந்தல்காடு பகுதியை சேர்ந்த வரதராஜன் மகள் காயத்ரி(12). இவர்,  கும்பக்கொட்டாய் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக தண்ணீர் பந்தல்காடு பகுதியில் ராசிபுரம்-ஆத்தூர் நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.

அப்போது,  ஆத்தூர் நோக்கி அதிவேகமாக வந்த  கார், காயத்ரி மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த  தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த நாமகிரிப்பேட்டை போலீசார்,  காயத்ரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  காயத்ரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சக மாணவ, மாணவிகள், விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளரை கைது செய்யக்கோரி, சாலை  மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் சுமார் 5 கி.மீ  தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து வரிசையில் நின்றிருந்தன.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த  டிஎஸ்பி விஜயராகவன், ஆர்ஐ மற்றும் போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் அதிவேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.  இங்கு வேகத்தடை அமைக்க, பல முறை அதிகாரிகளிடம்  புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. தற்போது, மாணவியின் சாவுக்கு காரணமான காரின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும். இப்பகுதியில்  மேம்பாலம் கட்டவேண்டும்,’ என்றனர்.

இதுகுறித்து கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக  அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் சமாதானமடைந்த பொதுமக்கள், மறியலை கைவிட்டு  கலைந்து சென்றனர். தொடர்ந்து போக்குவரத்தை போலீசார் சீர்படுத்தினர். இந்த திடீர் மறியலால், அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம்  போக்குவரத்து தடைபட்டது.

Related Stories: