போலீஸ் குவிப்பால் பரபரப்பு மிடாலத்தில் மீனவர்கள் கோஷ்டி மோதல்

நாகர்கோவில், ஜூன் 13: குமரி மாவட்டம் கருங்கல்  அருகே உள்ள மிடாலம் பகுதியை சேர்ந்தவர் சகாயராஜ் (43). மீனவர். இவரது மகளை  கடந்த இரு வாரங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ஜாக்சன் (27) என்பவர்  கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சகாயராஜ், அவரது  சகோதரர் எட்வின்பிரபு (40) ஆகியோர் ஜாக்சன் வீட்டுக்கு சென்று அவரை  கண்டித்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் இவர்கள் இருவர் மீதும்  மிளகாய் பொடி தூவி விரட்டியுள்ளனர். பின்னர் எட்வின்பிரபு மற்றும்  சகாயராஜ் ஆகியோர் மிடாலம் அருகே உள்ள சினேகபுரம் பகுதியில் வரும்போது  ஜாக்சன் உள்பட 5 பேர் சேர்ந்து அவர்களை வழிமறித்து தகராறு செய்து இருவரையும் சரமாரியாக  தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இது குறித்து சகாயராஜ்  அளித்த புகாரின்படி ஜாக்சன், ராபின் (30), ஜாண்குழந்தை, ஜாண்கில்டா, ஜெகன்  ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இதுபோல்  ஜாக்சனின் தாய் பேபி (56) கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதில், சம்பவத்தன்று தனது மகன் ஜாக்சனை தேடி வந்த எட்வின், சகாயராஜ்  மற்றும் சிலர் வீடு புகுந்து தங்களை தாக்கியதாகவும், வீட்டில் இருந்த  பெண்களின் ஆடையை பிடித்து இழுத்து அவமதிப்பு செய்ததாகவும், இவர்களது  தாக்குதலில் வீட்டில் இருந்த ஜாண்கில்டா (48) படுகாயம் அடைந்ததாகவும்  கூறியுள்ளார்.  இந்த புகாரின்படி, எட்வின், சகாயராஜ், சிங், அருண்,  கென்னடி, ரமேஷ் உள்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு  தரப்பினர் பிரச்னையை தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: