திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி

திருத்துறைப்பூண்டி,ஜூன் 12: திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநகர செயலாளர் ரகுராமன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: அக்னிநட்சத்திரம் முடிந்த பின்பும் அதிக வெப்பம் இருந்துவருகிறது. இதனால் கோடையில் மின் தேவைஅதிகம் ஏற்படுகிறது.மின் விசிறி, பிரிட்ஜ், ஏசி, ஏர் கூலர், ஏர் பேன் போன்றவைகளின் பயன்பாடு பலமடங்கு அதிகரித்துள்ளது.மின்மிகைமாநிலமாக தமிழகம் திகழ்வதாக அரசு அறிவித்துள்ள நிலையில் திருத்துறைப்பூண்டி நகர் பகுதிகளில் மின்வாரியம் மூலம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் திடிரென மின்வெட்டு ஏற்படுகிறது.

தினமும் வெவ்வேறுஇடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகபகல் மற்றும் இரவு நேரங்களில் பல்வேறுகாரணங்களை கூறி மின்வெட்டை நிர்வாகம் அமல்படுத்திவருகிறது. இதுகுறித்து புகார் அளிக்க முயன்றால் பலமணி நேரம் மின்வாரிய எண்.பிசியாக இருந்து வருகிறது.பொதுமக்கள் புகாரை கண்டுகொள்ளாமல் பராமரிப்பு என்ற பெயரில் திசைதிருப்பப்பட்ட தகவல்கள் தரப்படுகிறது. மின் தடை குறித்து முன்கூட்டியே குறுந்தகவல்களும் வருவதில்லை.

ஏற்கனவே ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் நகர்புற சிறுதொழில்கள் நலிவடைந்து வரும் நிலையில் மேலும் இது போன்ற அறிவிக்கப்படாத மின் தடைகாரணமாக வணிகநிறுவனங்களும் அதை சார்ந்த நுகர்வோரும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பொதுமக்கள் தங்கள் வேலைகளை திட்டமிட்டபடி செய்யமுடியாமலும், வெயில் கொடுமையைசமாளிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ மாணவியர்கள் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும் மின் தடைகாரணமாக குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.எனவே இதுகுறித்து உடனடியாக கலெக்டர் தலையிட்டு மின் தடையை சீரமைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Related Stories: