புவனகிரி தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்

புவனகிரி, ஜூன் 11: புவனகிரி தொகுதி எம்எல்ஏ துரை.கி.சரவணன், கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: புவனகிரி சட்டமன்ற தொகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதனால் உடனடியாக குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். புவனகிரி தொகுதியில் சுமார் 1 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். பாசனத்திற்கு தண்ணீர் இல்லாததால் இப்பகுதிகளில் தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலையை விரிவுபடுத்தி மேம்படுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் அதை செப்பனிடுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, தேர்தல் விதி காரணமாக அந்த பணிகள் நிறுத்தப்பட்டது. அதனால் உடனடியாக அந்த பணிகளை துவக்கி சாலையை சீரமைக்க வேண்டும். வெள்ளாற்றின் குறுக்கே டி.பவழங்குடி- டி.நெடுஞ்சேரி இடையே தரைப்பாலம் அமைக்க வேண்டும். வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்க பு.ஆதிவராகநல்லூரில் உடனடியாக தடுப்பணை கட்ட வேண்டும். என்எல்சி நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி, அந்த துறை அமைச்சரின் அழுத்தத்தால் வெளி மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதை என்எல்சி நிறுவனத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கே ஒதுக்கி அடிப்படை வசதிகளை மேம்படுத்திட உத்தரவிட வேண்டும். இந்நிறுவனத்தின் சார்பில் கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். சேத்தியாத்தோப்பு எம்ஆர் கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு உடனடியாக நிலுவை தொகையை வழங்குவதோடு, பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தினை துவக்கிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த சந்திப்பின்போது, திமுக சார்பில் ஊராட்சிகளில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் அனைத்தையும் ஆட்சியரிடம் எம்எல்ஏ வழங்கினார். மேலும், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி ஆட்சியரை எம்எல்ஏ கேட்டுக் கொண்டார்.

Related Stories: