தேன்கனிக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

தேன்கனிக்கோட்டை, ஜூன் 11:  தேன்கனிக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு பஸ்சை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது முத்துராயன்தொட்டி. இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்காக அக்கிராமத்தில் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடும் வறட்சியின் காரணமாக ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தது. படு பாதாளத்திற்கு சென்ற நீர்மட்டதால் போதிய அளவில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பிற்குள்ளாகினர். நீண்ட தூரம் சென்று விவசாய தோட்டங்களில் தண்ணீர் பிடித்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று மதியம் காலிகுடங்களுடன் பாலதோட்டனப்பள்ளி சாலையில் திரண்டனர். பின்னர், அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், தேன்கனிக்கோட்டை தாசில்தார் பாலசுந்தரம், தளி எஸ்ஐ சிவராஜ், தளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், சீனிவாசசேகர் உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, குடிநீர் சப்ளை சீர்செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: