பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த புற்களை மேய்ந்த 10 ஆடுகள் சாவு நஷ்ட ஈடு வழங்க விவசாயி கோரிக்கை

காளஹஸ்தி, ஜூன் 7: சித்தூர் அருகே பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த புற்களை மேய்ந்த 10 ஆடுகள் பரிதாபமாக இறந்தது. இதற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மத்தியானம்வாரி பல்லி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர், தனக்கு சொந்தமான 10 ஆடுகளை அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நேற்றுமுன்தினம் மேய்த்துகொண்டிருந்தார். அப்போது 10 ஆடுகளும் ஒவ்வொன்றாக திடீரென சுருண்டு விழுந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த விஜயகுமார், கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த டாக்டர்கள், ஆடுகளை பரிசோதித்தபோது, 10 ஆடுகளும் இறந்தது தெரிந்தது.

விசாரணையில், ஆடுகள் மேய்ந்த நிலத்தின் ஒரு பகுதியில் உள்ள தக்காளி தோட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து இருந்தது, அதில் இருந்த புற்களை ஆடுகள் மேய்ந்ததால் இறந்தது தெரியவந்தது. இந்நிலையில் ஆடுகள் இறந்ததால் ₹1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும், தனக்கு நஷ்டஈடு வழங்கும்படி குரபலகோட்டா வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விஜயகுமார் மனு அளித்துள்ளார். ஏற்கனவே இதேபோல் பலமுறை பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்ட தண்ணீரை குடித்தும் ஆடுகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: