20 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் துவங்கியது

பெரம்பலூர், ஜூன் 4: பெரம்பலூர் மாவட்டத்தில் 20 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நேற்று முதல் துவங்கியது. மாணவ மாணவியர் சேர்க்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 2,381 அரசு நடுநிலைப்பள்ளிகளின் வளாகத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் ஆங்கிலவழி கல்வியான எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்டது. இதற்காக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரியாகவுள்ள இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் துவங்க உத்தரவிடப்பட்டது. இதற்காக அங்கன்வாடி மையங்களில் இருந்த குழந்தைகளை பிரித்து அவர்களில் 3 வயதுக்கு மேலுள்ளவர்களை எல்கேஜி வகுப்பிலும், 4 வயதுக்கு மேலுள்ளவர்களை யூகேஜி வகுப்பிலும் சேர்த்து அட்மிஷனும் வழங்கப்பட்டது. இந்த வகுப்புகளுக்கு அரசு நடுநிலைப்பள்ளிகளில் உபரியாகவுள்ள 20 இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் அடிப்படையில் கட்டாய பணி நியமனம் செய்யப்பட்டனர்.

இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்ற கிளைகளிலும் வழக்கு தொடுத்திருந்தனர். இதன் காரணமாக அங்கன்வாடி மையங்களில் புதிதாக துவங்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் செயல்படாமல் முடங்கி போயிருந்தது. இந்நிலையில் ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்த வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஆசிரியர்களுக்கு பணியில் சேருமாறு அறிவுரை கூறியது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 20 பள்ளிகளில் அங்கன்வாடி மையங்களில் ஆங்கிலவழி கல்வி முறையான எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் துவங்கி நடந்தன. இதையொட்டி எல்கேஜி, யூகேஜிக்கான புதிய பெயர் பலகைகள் வைத்து மாலையிட்டு சிறப்பு வழிபாடு நடத்தி மாணவ, மாணவியருக்கு இனிப்புகள் வழங்கி புதிய வகுப்புகள் துவங்கப்பட்டன. மேலும் 20 அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரியலூரில் உற்சாகத்துடன் சென்ற மாணவர்கள்: கோடை விடுமுறை முடிந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. இதையொட்டி விடுமுறையை கழித்த உற்சாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் சென்றனர்.

பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு முடிந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் நேற்று சென்றனர். 50 நாட்கள் விடுமுறையை கழித்த மாணவ, மாணவிகள், புது சீருடையுடன் பள்ளிக்கு வந்தனர். இதைதொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, இலவச புத்தகங்கள், நோட்டுகள், வண்ண பென்சில், வரைபட புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பே பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. மேலும் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் சிறுவர், சிறுமியர்களுக்கு இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

Related Stories: