இளைஞர்கள் பயன்பெறும் வகையில் உத்தமபாளையம் தாலுகாவில் தேவை விளையாட்டு மைதானம்

தேவாரம், ஜூன் 4: உத்தமபாளையம் தாலுகாவில்  விளையாட்டு மைதானம் அமைத்து தர தேனி கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர், கோம்பை, தேவாரம், ஓடைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் உள்ளன. இங்கு அரசு பணிகள், மற்றும் தனியார் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் படித்து கொண்டு இருக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானங்களோ, ஊக்கப்படுத்தும் திடல்களோ இல்லை.

இதனால் மத்திய அரசில் உள்ள ராணுவம், தரைப்படை, விமானப்படை, மாநிலத்தில் உள்ள காவல்நிலைய பணிகள், சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தங்களை தயார்படுத்துவதில் இளைஞர்கள் சிரமமடைகின்றனர். அரசு பள்ளிகள், கல்லூரிகளில் விளையாட்டு மைதானங்கள் இருந்தாலும் இதனை பள்ளி, கல்லூரி அல்லாத காலங்களில் பயன்படுத்த முடியாத நிலை தொடர்கதையாகி வருகிறது. எனவே, தாலுகா அளவில் விளையாட்டு மைதானங்களை அமைத்திட தேனி கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த மைதானங்களில் இளைஞர்களை ஊக்குவிக்கும் பயிற்சிகள் அளிப்பதுடன், உடல் வளத்தை பெருக்கக்கூடிய கருவிகளையும் அமைத்து தனி ஜிம் அமைக்கவேண்டும். இதுகுறித்து சமூக ஆர்வலரும், ஆம்ஆத்மி தேனி ஒருங்கிணைப்பாளருமான சிவாஜி கூறுகையில், `` தேனி மாவட்டத்தில் தாலுகா அளவில் இளைஞர்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானங்களை அமைக்கவேண்டும். இதனால் மாணவர்கள் எதிர்காலங்களில் உயரிய பணி வாய்ப்புகளை அடைவதற்கு ஊன்றுகோலாக அமையும். இளைஞர்கள் கல்வியில் முன்னேறுவதுடன், தங்களுக்கான விளையாட்டு தேடல்களில் சாதிக்கமுடியும். எனவே, தேனி கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: