விருதுநகரில் தெருநாய்கள் ‘ரவுண்ட் அப்’ பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்

விருதுநகர், மே 30: விருதுநகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் நகராட்சியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாலையோரம் கொட்டப்படும் கோழிக்கறிக்கடை இறைச்சிக் கழிவுகள், ஓட்டல் கழிவுகளை தின்பதற்காக சுற்றுகின்றன. இவைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

குறிப்பாக நகரில் தேசபந்து மைதானம், பழைய பஸ்நிலையம், மேற்கு காவல்நிலையம், புல்லலக்கோட்டை சாலை, கட்டபொம்மன் தெரு, பர்மா காலனி, கச்சேரி சாலை, நகராட்சி அலுவலக சாலை, இந்திரா நகர், அல்லம்பட்டி, பாண்டியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவைகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. தனிமையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை துரத்துகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் செல்கின்றனர்.

சில சமயம் வாகன ஓட்டிகளை விரட்டும்போது, அவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, விருதுநகரில் தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், அவைகளுக்கு கருத்தடை செய்யவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: