காரைக்குடி பகுதிகளில் வறட்சியின் தொடர் பாதிப்பால் அதலபாதாளத்தில் நீர்மட்டம்

காரைக்குடி, மே 30: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சம்பை ஊற்றுக்கு பெயர் பெற்றது. மாவட்டத்திலேயே அனைத்து மாதங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை வராத ஊராக காரைக்குடி விளங்கி வந்தது. இங்கிருந்து தான் காரைக்குடியில் உள்ள 36 வார்டுகளுக்கும் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. காரைக்குடி பகுதியில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், வடகிழக்கு பருவ மழையும் பொய்த்ததால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் காரைக்குடியை சுற்றியுள்ள கண்மாய்களும் குளங்களும் கடந்த 5 மாதங்களாக நீரின்றி வறண்டு கிடப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. காரைக்குடி பகுதியில் கடைசியாக நவம்பர் மாதத்தில் கஜா புயலின் போது மட்டுமே மழை பெய்தது. அதன் பிறகு மழையே இல்லை. அதுவும் நிலத்தடி நீர் உயரும் அளவுக்கு பெய்யாததால் நீரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ளது.

இதுகுறித்து சுப்பிரமணியபுரம் ரமேஷ் காந்த் கூறுகையில், காரைக்குடியில் நிலத்தடி நீருக்கும் சம்பை ஊற்றுக்கும் பெயர் பெற்றது. கடந்த 10 வருடங்களுக்கு முன்னால் நகராட்சி எல்லைக்குள் 40 அடியில் நிலத்தடி நீர் கிடைத்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 80 அடியில் கிடைத்த நிலத்தடி நீர் தற்போது 130 அடிக்கு கீழ் போய் விட்டது. ஆழ்குழாய் கிணறு (போர்வெல்) தற்போது 350 அடிக்கு மேல் போடப்படுவதாகவும், அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகமாக கட்டப்பட்டதாலும் நீரின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு மழை அளவு மிகவும் குறைந்துள்ளது மாவட்டத்திலேயே அனைத்து ஊர்களிலும் நிலத்தடிநீர் வெகுவாக குறைந்துள்ளது என்றும் நீடிப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் பஞ்சம் வந்து விட்டது என்றார். காரைக்குடியின் பல வார்டுகளில் சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் ஆங்காங்கே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் என்றார்.

Related Stories: