ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றதில் எங்களது பங்கும் உண்டு திருப்பதியில் இயக்குனர் ராம்கோபால் வர்மா பேட்டி

திருப்பதி, மே 30: ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றதில் எங்களுடைய பங்களிப்பும் உண்டு என்று திருப்பதியில் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா கூறினார். திருப்பதியில் உள்ள பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட எங்களுடைய திரைப்படமான லட்சுமி என்டிஆர் திரைப்படம் ஒரு காரணமாக அமைந்தது மக்களின் நம்பிக்கை நாயகனாக இருந்த முன்னாள் முதல்வர் என்டி ராமாராவ் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்தார். அவருடைய மருமகன் சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடிக்க செய்த சூழ்ச்சி பற்றி இந்த திரைப்படத்தில் காண்பித்திருந்தோம். இதனாலேயே ஆந்திர மாநிலத்தில் இந்த திரைப்படத்தை வெளியிட சந்திரபாபு நாயுடு அரசு தடுத்தது. ஆனால் தெலங்கானா உட்பட பிற மாநிலத்தில் இந்தப் படத்தை வெளியிட்டோம். இதன் பிறகு சந்திரபாபு நாயுடுவின் சுயரூபத்தை தற்போதைய இளம் தலைமுறையினர் தெரிந்து கொண்டு தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர்.

உண்மையான தெலுங்கு தேச கட்சி தொண்டர்களும் என் டி ராமராவின் விசுவாசிகளும் அரசுக்கு எதிராக வாக்களித்ததால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மிகுந்த பலத்தோடு வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: