பங்களா மேட்டில் சமூக விரோதிகளின் பிடியில் புதிய பஸ்ஸ்டாப்

தேனி, மே 28:  தேனி பங்களாமேட்டில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பஸ்ஸ்டாப்பினை சமூக விரோதிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

தேனி பங்களாமேட்டில் மதுரை சாலையில் பார்த்திபன் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியில் பல லட்சம் செலவில் புதிய பஸ்ஸ்டாப் கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸ்டாப் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து மக்கள் அமர சிலாப் அமைக்கும் முன்பே சமூக விரோதிகள் ஆக்கிரமித்து விட்டனர். பஸ்ஸ்டாப் முன்பாக கனரக வாகனங்களை நிறுத்திக் கொள்வதால் மக்கள் பயன்படுத்த முடியவில்லை.

மாறாக சமூக விரோதிகள் உள்ளே அமர்ந்து மது அருந்துவது, கஞ்சா புகைப்பது, சீட்டாடுவது போன்ற பல பணிகளில் ஈடுபடுகின்றனர். இரவில் பலான விஷயங்களும் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இத்தனை லட்சம் செலவு செய்தும் பலன் இல்லையே என நெடுஞ்சாலைத்துறையினரோ, நகராட்சி நிர்வாகமோ, போக்குவரத்து நிர்வாகமோ, போலீஸ் நிர்வாகமோ கவலைப்படவில்லை. இது எப்படி போனால் எங்களுக்கென்ன என்ற மனநிலையில் உள்ளனர். இதனால் பொதுமக்கள் வழக்கம் போல் வெயிலிலும், மழையிலும் காய்ந்தும், நனைந்தும் பஸ் ஏறி, இறங்குகின்றனர்.

Related Stories: