அரிமளம் அருகே சிறப்பு கால்நடை முகாம் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி

திருமயம், மே 23: தினகரன் செய்தி எதிரொலியாக அரிமளம் அருகே சிறப்பு கால்நடைமுகாம் நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் சுற்றுவட்டார கிராமங்கள் விவசாயத்தோடு கால்நடை வளர்ப்பையும் முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். இனிடையே கடந்தசில ஆண்டுகளாக அப்பகுதியில் நிலவிவரும் கடும் வறட்சியின் காரணமாக விவசாயம் பொய்த்துபோன நிலையில், சரியானமேய்ச்சல் நிலம், தீவன தட்டுப்பாடு காரணமாக திருமயம், அரிமளம் பகுதி விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டாமல் ஏற்கனவே வீட்டில் இருக்கும் கால்நடைகளை பராமரிக்க முடியாமல் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது பற்றி கடந்த திங்கள் கிழமை தினகரன் நாளிதழில் திருமயம், அரிமளம் பகுதியில் வறட்சி காரணமாக கால்நடை பராமரிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருவதாக விரிவாக செய்தி வெளியானது. மேலும் தீவன தட்டுப்பாட்டை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை செய்தியாக வெளிவந்தது.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்த துரித நடவடிக்கையால் நேற்று காலை அரிமளம் அருகே உள்ள தெற்கு பொந்துப்புளி கிராமத்தில் தமிழ்நாடு பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீட்டில் உள்ள ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை கொண்டு வந்து கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சென்றனர். இதுபற்றி கே.புதுப்பட்டி உதவி மருத்துவர் நிமலேசன் கூறியதாவது:மேலதிகாரிகள் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட கால்நடை சிறப்பு முகாமில் 69 மாடு, 127 கோழி, 145 ஆடுகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டது. அரிமளம் ஒன்றியத்தில் 7 கால்நடை மருந்தகங்கள் உள்ளன.இந்த அனைத்து மருந்தகத்திலும் சுகாதாரமான கால்நடை தொட்டிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 500 மரக்கன்றுகள் வழங்கியதோடு கே.புதுப்பட்டி கால்நடை மருத்துவமனை மூலம் மண்ணில்லா புல் வளர்ப்பு யூனிட் மூலம் பசும்புற்கள் வளர்க்கப்பட்டு மாநிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்ததிட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவசாயிகள் கால்நடைகள் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க பசுந்தீவனம் வழங்குவதோடு மதிய நேரங்களில் வெயிலில் மேய்ச்லுக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருநாளைக்கு 4 அல்லது 6 முறையாவது சுத்தமான குடிநீர் மாடுகளுக்கு வழங்க வேண்டும். அதேசமயம் கோடைவெயில் அதிகம் இருப்பதால் ஆடுகளை காலை6-11 மணிவரையிலும், மாலை3-6.30 மணிவரையிலும் மேய்சலுக்கு அனுமதிப்பது நல்லது என்றார்.அறந்தாங்கி வட்ட கால்நடை உதவி இயக்குனர் கால்நடை மருத்துவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில் நடமாடும் கால்நடை மருந்தக மருத்துவர் இளசரசி, உதவியாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: