சின்னமனூர் மக்கள் எதிர்பார்ப்பு தேனியில் வாக்கு எண்ணும் மையப்பணிக்கு 400 அலுவலர்களுக்கு பணி ஆணை

தேனி, மே 23: தேனியில் இன்று நடக்க உள்ள தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அரசு அலுவலர்கள் 400 பேருக்கு பணி ஆணை நேற்று வழங்கப்பட்டது.

தேனி மக்களவை தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப். 18ம் தேதி நடந்தது. இதில் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 67க்கும், பெரியகுளம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட வடுகபட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண் 197க்கும் கடந்த மே 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடந்தது.

தேனி மக்களவை தொகுதிக்கான தேர்தல் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்து, இத்தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்று (23ம்தேதி) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

வாக்கு எண்ணும் பணியில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு சுற்றுக்கு 14 டேபிள்கள் வீதம் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளது. ஒரு டேபிளுக்கு ஒரு மைக்ரோ அப்சர்வர், ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் என மூன்று பேர் வீதம் ஒரு தொகுதிக்கு 42 அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.இதன்படி, தேனி வாக்கு எண்ணும் மையத்தில் இன்று நடக்க உள்ள வாக்கு எண்ணும் பணியில் தேனி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு 252 அரசு அலுவலர்களும், இடைத்தேர்தல் நடந்த பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு 84 அலுவலர்களும் பணிஅமர்த்தப்பட்டுள்ளனர். இதன்படி, மொத்தம் 336 பேர் வாக்கு எண்ணும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தவிர கூடுதலாக 18 சதவீதம் பணியாளர்களாக 60 பேர் என மொத்தம்400 பேர் இப்பணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வுசெய்யப்பட்ட வாக்கு எண்ணும் மைய அலுவலர்களுக்கு பணி ஆணை வழங்க நேற்று காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். வந்திருந்த அரசு அலுவலர்கள் எந்தத் தொகுதிக்கு பணிக்கு செல்ல வேண்டும் என்பதை குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர். இதன்பின்னர், வாக்கு எண்ணும் பணிக்கு செல்லும் அலுவலர்களுக்கு கலெக்டர் அலுவலக கீழ் தளத்தில் உள்ள வராண்டாவில் போடப்பட்டிருந்த தொகுதி வாரியான டேபிள்களில் பணியாணை வழங்கப்பட்டது.

காலை 10 மணிக்கு வந்த அரசு அலுவலர்களுக்கு மாலை வரை காக்கவைத்து பணி ஆணைகள் வழங்கப்பட்டது. இதில் வாக்கு எண்ணும் பணிக்காக வந்திருந்த பல அலுவலர்களுக்கு பணியாணை வழங்காமல் திருப்பி அனுப்பப்பட்டனர். வாக்கு எண்ணும் மையத்திற்கான பணியாணை தொகுதிவாரியாக பெற்ற அலுவலர்களுக்கு இன்று காலை வாக்கு எண்ணும் மையத்தில் எந்த டேபிளில் பணிபுரிவது என சட்டமன்றத் தொகுதி வாரியாக குலுக்கல் முறையில் தேர்வு செய்து அந்தந்த டேபிள்களுக்கு பணியாணை வழங்கப்பட உள்ளது.

Related Stories: