வாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்போன் கொண்டு செல்ல தடை

மதுரை, மே 22: மதுரை மக்களவை தொகுதி, திருப்பரங்குன்றம் சட்டமன்றம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை, மதுரை மருத்துவக்கல்லூரியில் நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் கூறுகையில், ‘ஆறு சட்டமன்ற தொகுதிவாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கான எண்ணிக்கை மையத்திலும் தலா 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. அதனைச் சுற்றிலும் தடுப்புக்கம்புகள் கட்டப்பட்டு, அதில் கம்பி வலைகளால் அடைக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ அப்சர்வர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடக்கும். இதற்காக ஒவ்வொரு மேஜைக்கும் தலா ஓரு மைக்ரோ அப்சர்வர், ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர் என 3 பேர் வீதம் இப்பணியில் ஈடுபடுவார்கள். சிசிடிவி கேமரா மூலம் வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்தை வீடியோவும் எடுக்கப்படும். மையம் முழுவதும் மொத்தம் 32 கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை நாளை காலை காலை 8 மணிக்கு துவங்கும், இரு தொகுதிகளுக்கான தபால் ஓட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த தபால் ஓட்டுகள் முதலில் எண்ணும் பணி துவங்கும். அதன்பின்பு மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். அதே நேரத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 விவிபெட் இயந்திரம் என 30 விவிபெட் இயந்திரத்தில் உள்ள ஓப்புகை பதிவு சீட்டுகள் எண்ணப்படும். ஓவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் ஓட்டு விபர படிவத்தில் தேர்தல் பார்வையாளர் கையெழுத்த போட்ட பின்புதான் முடிவுகள் வெளியிடப்படும்.

முன்னணி நிலவரம் காலை 9 மணி முதல் தெரிய வரும். மொத்தம் 22 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மாலை இறுதி முடிவு தெரிய வாய்ப்பு உண்டு. வாக்கு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் பேப்பர், பேனா மட்டுமே கொண்டு வரவேண்டும். செல்போன் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வர அனுமதியில்லை. இவ்வாறு அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: