வரதராஜ பெருமாள் கோயிலில் நாளை தேரோட்டம்

காஞ்சிபுரம், மே 22: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் வைகாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான 7வது நாள் திருத்தேரோட்ட உற்சவம் நாளை நடைபெற உள்ளது. கடந்த17ம் தேதி வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாள் மலையில் இருந்து கீழே இறங்கினார். இதை தொடர்ந்து தங்க சப்பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இதையொட்டி, தினமும் காலை மற்றும், வேளைகளில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை, ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திர பிரபை, தங்கப் பல்லக்கு, யாழி வாகனம், தங்க சப்பரம் ஆகியவற்றில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான மே 19ம் தேதி கருடசேவை உற்சவம் நடைபெற்றது. அதில், சிறப்பு அலங்காரத்துடன் கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கத்துடன் கோபுர தரிசனம் செய்தனர்.இந்நிலையில், 7ம் நாளான நாளை திருத்தேரோட்ட உற்சவம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாய் எழுதந்தருளுவார். பின்னர் வரதராஜ பெருமாள், கோயிலில் இருந்து காந்தி சாலை தேரடிக்குக் கொண்டு வரப்பட்டு, அங்குள்ள தேரில் அதிகாலை 5.15 மணிக்கு அமர்த்தப்படுவார். தொடர்ந்து தேரின் மீது அமர்ந்திருக்கும் வரதராஜ பெருமாளை, தேரின் மீது ஏறிச் சென்று வழிபட அதிகாலை 5.15 முதல் காலை 6 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.பின்னர் 6 மணிக்குத் தேர் புறப்பாடு நடைபெறும். தேரோட்டத்தை காண பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தேரை வடம் பிடித்து இழுப்பர். இதனால் நாளை, காஞ்சிபுரம் நகரத்தின் அனைத்து சாலைகளிலும் மக்கள் வெள்ளமாக இருக்கும்.

இந்த தேரோட்டம், காந்தி சாலையில் இருந்து காமராஜர் சாலை வழியாக சென்று காஞ்சி காமாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள 4 ராஜ வீதிகளில் வலம் வந்து, பின்னர் நிலைக்கு திரும்பும் திருத்தேரோட்டம் நடைபெறும் நாளில் பக்தர்கள் மற்றும் வணிக நிறுவனத்தினர் சார்பில் பக்தர்களுக்கு மோர், பழரசம், வெண் பொங்கல், தயிர் சாதம், புளியோதரை ஆகியற்றை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பிரம்மோற்சவத்தின் 9வது நாள் கோயிலில் உள்ள குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். 10ம் நாள் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடையும். விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் (பொறுப்பு) தியாகராஜன், திருக்கோயில் பணியாளர்கள், கைங்கர்யதாரர்கள் செய்கின்றனர்.

Related Stories: