வன பணியாளர் பயிற்சி கோவையில் துவங்கியது

கோவை, மே 21: கோவை வன பயிற்சி மையத்தில் வன பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. தமிழ்நாடு வனவர் சீருடை பணி குழுமம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற 300 பேருக்கு ஆறு மாத பயிற்சி வகுப்பு கோவை வன பயிற்சி மையம் மற்றும் வைகை அணை தமிழ்நாடு வனப்பயிற்சி கல்லூரியில் அளிக்கப்படுகிறது. இதற்கான, துவக்க விழா நேற்று கோவை வன பயிற்சி மையத்தில் நடந்தது. வனத்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர் துவக்கிவைத்தார். இதில், வனத்துறை தலைவர் மல்லேசப்பா, தமிழ்நாடு வன பயிற்சி மைய இயக்குனர் செபாஸ்டிஸ் ஜனா, கூடுதல் இயக்குனர் திருநாவுக்கரசு, உதவி வனபாதுகாவலர்கள் தினேஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பயிற்சியில் 100 பெண்கள் உள்பட 280 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு, வன பாதுகாப்பு, வனச்சட்டம், மரம் வளர்த்தல், வனவிலங்குகள் பாதுகாப்பு, சர்வே எடுப்பது உள்பட 9 பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்படும். பின்னர், தேர்வு நடத்தி தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பயிற்சியின் போது தமிழகத்தில் உள்ள அனைத்து வனப்பகுதிக்கும் அழைத்து செல்லப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: