பெரம்பலூர் மக்களவை தொகுதி வாக்குகள் எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர், மே 21: பெரம்பலூர் மக்களவை தொகுதி வாக்குகள் எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார். பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை, முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர், பெரம்பலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பெரம்பலூர் வாக்குகள் எண்ணும் மையமான தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து வாக்குகள் எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா நேற்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதி, செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊடக மைய வசதி குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது: வாக்குகள் எண்ணும் பணி 23ம் தேதி காலை 8 மணிக்கு துவங்கும். முதலில் தபால் வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்னிலையில் எண்ணப்படும். வாக்கு எண்ணும் பணிகளில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள் என 306 நபர்கள் ஈடுபடவுள்ளனர்.

அதன்பிறகு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு பல்வேறு சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன. அதன்படி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாகவும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாகவும் எண்ணப்படும். லால்குடி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் 18 சுற்றுகளாகவும், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாகவும் எண்ணப்படும். முசிறி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளாகவும், துறையூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது பெரம்பலூர் மாவட்ட எஸ்பி திஷாமித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், தாசில்தார் சித்ரா உடனிருந்தனர்.

Related Stories: