பட்ட மேற்படிப்பு அனுமதி தொடர்பாக மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.சி.ஐ. அதிகாரி ஆய்வு

மதுரை, மே 19: மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவில் பட்ட மேற்படிப்புக்கு (எம்.சி.ஹெச்) 4 மாணர்கள் சேர்க்கைக்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில், ரத்தநாள அறுவை சிகிச்சையில் பட்ட மேற்படிப்புக்கு அனுமதி வழங்குவது தொடர்பான ஆய்வு நடந்தது.  மதுரை அரசு மருத்துவக்கல்லூரி தமிழக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள பழமையான கல்லூரி. இக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் 150 மாணவர்கள் சேர்க்கை தற்போது நடந்துகொண்டிருக்கிறது.

இதை 250 ஆக உயர்த்த பல்ேவறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு துறைகளில் பட்ட மேற்படிப்புக்கு அனுமதி கேட்டு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நரம்பியல் மெடிசன் துறையில் (டி.எம்)3 இடங்களும், இருதய நோய் சிகிச்சை துறையில் (டி.எம்) 4 இடங்களும், குடல் அறுவை சிகிச்சை(எம்.சி.ஹெச்) துறைக்கு 4 இடங்களும், ரத்தநாள அறுவை சிகிச்ைச துறைக்கு (எம்.சி.ஹெச்)4 இடங்கள், இருதய அறுவை சிகிச்சை (எம்.சி.ஹெச்) 6 இடங்களுக்கும் அனுமதி கேட்டு இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பப்பட்டு பல ஆண்டுகளாகிறது.

ஆய்வுக்கு வருவதாக கூறிவரும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் சிறுசிறு குறைகளை சுட்டிக்காட்டி அனுமதி தர தாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் ரத்தநாள அறுவை சிகிச்சை துறையில் பட்டமேற்படிப்புக்கு கேட்கப்பட்ட 4 இடங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான ஆய்வுக்காக இந்நிய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் நேற்று முன்தினம் மருத்துவக்கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, டீன் வனிதா, மருத்துவக்கண்காணிப்பாளர் ராஜா, நிலைய மருத்துவ அதிகாரி லதா உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனர். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை ஆய்வு நடந்தது.

6க்கு 4 கிடைத்தது

பேராசிரியர் ஒருவர் கூறும்போது, சமீபத்தில், சிறுநீரக அறுவை சிகிச்சை துறைக்கு கேட்கப்பட்ட 6 இடங்களில். 4 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள இந்திய மருத்துவக்கவுன்சில் அனுமதி கொடுத்துவிட்டது. இதேபோல் ரத்தநாள அறுவை சிகிச்சை துறைக்கும் இந்தாண்டு அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம். வரும் 2019-2020ம் கல்வி ஆண்டில் இந்த இரு துறைகளிலும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 8 மாணவர் கள் பட்ட மேற்படிப்பு படிக்க உள்ளனர்’’ என்றார்.

Related Stories: