தபால்ஓட்டு போட்ட போலீசார்!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் இரு நாட்களே இருக்கும் நிலையில், உச்சக்கட்ட பிரசாரத்துடன், தேர்தல் பணிகளும் வேகமடைந்துள்ளன. இதற்கிடையில் திருப்பரங்குனறம் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் போலீசாரில் 236 பேருக்கு தபால் ஓட்டுகள் தரப்பட்டுள்ளது.

இதையொட்டி நேற்று மதுரை தெற்கு தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டுகளை பெட்டியில் அளிப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது. சீல் வைக்கப்பட்ட பெட்டியில் ஏராளமான போலீசார் தங்கள் தபால் ஓட்டுகளை வழங்கினர். சிலர் தபால் ஓட்டுக்கான சீட்டுகளை பெற்றுச் சென்றனர். இவர்கள் அடுத்தடுத்த நாட்களில் தங்கள் ஓட்டுகளை வழங்கலாம்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரி பஞ்சவர்ணம், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி நாகராஜன் ஆகியோர் கூறும்போது, ‘‘236 போலீசாருக்கு ஓட்டுகள் தரப்பட்டுள்ளன. தெற்கு தாலுகா அலுவலக சிறப்பு முகாமிலும் பலர் ஓட்டளித்துள்ளனர். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தபால் ஓட்டுகளுக்கான சீலிட்ட பெட்டி வைக்கப்படும். அதில் ஓட்டுகளை போடலாம். தபாலிலும் இந்த அலுவலகத்திற்கு ஓட்டுகளை அனுப்பி வைக்கலாம். 22ம் தேதி இறுதி நேரம் வரையிலும் தபாலில் ஓட்டுகளை அனுப்பி வைக்கலாம்’’ என்றனர்.

ஒண்ணுகூடிட்டாங்கய்யா...ஒண்ணுகூடிட்டாங்கய்யா...

திருப்பரஙகுன்றம் பதினாறுகால் மண்டபம் முன்பு நேற்று சுயேட்சை வேட்பாளர்கள் மொத்தமாக ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  இதில் சுயேச்சை வேட்பாளர்களான ஆறுமுகம், பூவநாதன், நாகராஜ், உக்கிரபாண்டி, செல்லப்பாண்டியன், சேகர் ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரே மேடையில் தோன்றி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் பேசிய வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறை மீறல் குறித்த புகார்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டினர்.  ஒரே மேடையில் சுயேச்சை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்தது வேடிக்கையாக பொதுமக்கள் பார்த்து சென்றனர்.

Related Stories: