திருமங்கலம் விடத்தகுளம் சாலையில் ஓடும் கழிவுநீர்

திருமங்கலம், மே 17: திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் தேவர்சிலை அருகே கடந்த மூன்று நாள்களாக பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு எழுந்துள்ளது. திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் தேவர்சிலை அருகே திருமண மண்டபத்தையொட்டி கடந்த மூன்று நாள்களாக கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

துர்நாற்றம் வீசும் கழிவுநீரால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு எழுந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் நகராட்சியில் புகார் செய்தனர். நகராட்சி ஊழியர்கள் வந்து கழிவுநீர் உடைந்து வெளியேறும் பகுதியில் அடைப்பை சரிசெய்தனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்குள் மீண்டும் கழிவுநீர் வெளியேறத்துவங்கியது. இதனால் விடத்தகுளத்தை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பொத்தியபடியே சென்றுவருகின்றனர்.

இது குறித்து நகராட்சியில் கேட்டபோது, விடத்தகுளம் ரோட்டில் திருமண மண்டபத்தின் முன்பு பெருக்கெடுத்த கழிவுநீர் அடைப்பை சரிசெய்தோம். மீண்டும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுகிறது. இந்த பகுதியில் உள்ள ஓட்டல்களில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே வெளியேற்றிவிடுகின்றனர். இதனால் கழிவுகள் அடைத்து குழாய் உடைகிறது.

ஓட்டல்கள், திருமணமண்டபங்களில் சேம்பர் தொட்டி அமைத்து கழிவுகளை பில்டர் செய்து தண்ணீரை மட்டுமே வெளியேற்ற வேண்டும். ஆனால் திருமங்கலத்தில் பெருவாரியான நிறுவனங்கள் இதனை செய்வதில்லை. கழிவுகளுடன் கழிவுநீரையும் வெளியே விடுவதால் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுகிறது. மீண்டும் அதனை சரிசெய்வோம் என்றனர்.

Related Stories: