பள்ளி மாணவர்களுக்கு வழங்க இலவச பாட புத்தகங்கள் தயார்

பொள்ளாச்சி, மே 15:  பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வினியோகிக்க, நடப்பாண்டிற்கான  இலவச பாட புத்தகம் தற்போது வரபெற்றுள்ளது.  பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகளுக்கான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதத்தில் நடந்தது. அதுபோல், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான இறுதி தேர்வு கடந்த ஏப்ரல் மாதம்  நடைபெற்றது. தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில்,  ஜூன் 3ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ளன. இந்நிலையில், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் வழங்கப் வேண்டிய இலவச பாடபுத்தகங்கள் அனைத்தும், தமிழ்நாடு பாடநூல்கழகம் மூலம் அச்சிடப்பட்டு, அந்தந்த கல்வி மாவட்டம் வாரியாக வினியோகிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

இதில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, நகராட்சி பள்ளி, சுயநிதிபள்ளி, ஆதி திராவிட நல பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்க உள்ள மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக, அனைத்து பாடத்திட்டங்களுக்குண்டான பெரும்பாலான புத்தகங்கள் வரபெற்றுள்ளது. அவை, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள தனி அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

அதுபோல், ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட துவக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் அந்தந்த ஒன்றிய வட்டார கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் வால்பாறை, ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தனித்தனியாக,  இம்மாதம் இறுதியில் வழங்கப்பட்டு, ஜூன் முதல் வாரத்தில் பள்ளி திறக்கும்போது,  அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடபுத்தகம் வழங்கும் பணி நடக்க உள்ளது என, கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: