மாநில ஹாக்கி போட்டியில் வாடிப்பட்டி அணி சாம்பியன்

வாடிப்பட்டி, மே 15: வாடிப்பட்டியில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் எவர்கிரேட் ஹாக்கி கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது

வாடிப்பட்டியில் எவர்கிரேட் ஹாக்கி கிளப் சார்பில் மாநில அளவில் ராமர் நினைவு ஹாக்கி போட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானத்தில் 2 நாள் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் வாடிப்பட்டி எவர்கிரேட் ஹாக்கி கிளப் அணி, திண்டுக்கல் புஷ்பகரம் ஹாக்கி அகாடமி அணி மோதின.

இதில் வாடிப்பட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.பரிசளிப்பு விழாவிற்கு மதுரை மாவட்ட ஹாக்கி சங்க முன்னாள் தலைவர் ராஜூ தலைமை வகித்தார். எவர்கிரேட் ஹாக்கி கிளப் செயலாளர் சிதம்பரம் முன்னிலை வகித்தார். எவர்கிரேட் ஹாக்கி கிளப் தலைவர் ராமானுஜம் வரவேற்றார். வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் குமார், பள்ளி தலைமை ஆசிரியர் சரவணமுருகன், துரைராஜ், காந்தி, பிச்சை என்ற முருகன், பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

சமயநல்லூர் டிஎஸ்பி மோகன்குமார் சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பணம் ரூ.15 ஆயிரத்தை வாடிப்பட்டி எவர்கிரேட் ஹாக்கி கிளப் அணிக்கு வழங்கினார். இரண்டாவது பரிசு பெற்ற திண்டுக்கல் புஷ்பகரம் அணிக்கு வழக்கறிஞர் அசோக்குமார் பரிசுக்கோப்பை மற்றும் ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம் வழங்கினார். எவர்கிரேட் ஹாக்கி கிளப் துணை செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

Related Stories: