ஆலத்தூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பரவலாக மழை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது

பாடாலூர், மே 10: ஆலத்தூர் தாலுகா பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவாளி காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் கடந்த ஓராண்டாக சரியான மழை இல்லாமல் மிகவும் வறண்டு காணப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால்  விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாய பயிர்கள் சாகுபடி செய்ய முடியாமல் தவித்து வந்தனர். கடந்த பருவத்தில் மழை பெய்யும் என நினைத்து வெங்காயம் சாகுபடி செய்தவர்கள் மழை பொய்த்துபோனதால் லாரிகள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி வெங்காயத்தை விளைய வைத்தனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து மக்களை வாட்டி வதைத்தது.

மேலும் கடந்த ஒரு வாரமாக அக்னி நட்சத்திரம் துவங்கியதில் இருந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவே தயங்கினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. ஆலத்தூர்  தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் பரவலாக மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு  தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டது. இதனால் கோடை வெப்பத்தால் வாடிய பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: