நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகே மரம் விழுந்து காயமடைந்தவர் பலி

நெல்லை, மே 10: நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகே மரம் விழுந்து காயமடைந்தவர் இறந்தார். நெல்லை சந்திப்பு ரயில்வே பீடர் சாலையில் 80 ஆண்டுகள் பழமையான மூன்று உயரமான மருதமரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ரயில்வே பீடர் சாலை வழியாக ஆட்டோ, பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் மீனாட்சிபுரத்துக்கும், சந்திப்பு ரயில் நிலையத்துக்கும் சென்று வந்தன.

அப்போது பாளை அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் இருந்து மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு திருமண வீட்டிற்கு பெண்கள் இருவர் காரில் வந்தனர். காரை ரெட்டியார்பட்டியை சேர்ந்த இசக்கி மகன் சுப்பிரமணி (40) என்பவர் ஓட்டி வந்தார். கார் சந்திப்பு ரயில் நிலையத்தை தாண்டி  ரயில்வே போலீஸ் நிலையம் அருகே வந்த போது அங்குள்ள மருதமரம் திடீரென பயங்கர சத்தத்துடன் முறிந்து கார் மீது விழுந்தது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் சுப்பிரமணி (40) மற்றும் சாலையில் நடந்து வந்த கடையநல்லூரைச் சேர்ந்த ராஜ் (49) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் இருவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராஜ், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: