கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியால் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி வேலூர்-ஆற்காடு சாலையில்

வேலூர், மே 10: வேலூர்-ஆற்காடு சாலையில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். வேலூர் நகரின் மையப்பகுதியான ஆற்காடு சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் மட்டுமின்றி வாகன நெரிசலும் அதிகளவில் இருக்கும். இந்த நெரிசலுக்கு இந்த சாலை இருவழிப்பாதையாக பயன்பாட்டில் இருந்ததே காரணம். இந்நெரிசலை தவிர்ப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. சத்துவாச்சாரியில் இருந்து ஆற்காடு சாலைக்கு உள்நுழைய போக்குவரத்து போலீசார் தடை விதித்தனர். ஆனால் ஒருவழிப்பாதையாக அறிவிக்கப்பட்டாலும் எல்லா வாகனங்களும் இருபுறமும் எவ்வித தடையுமின்றி சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வேலூர் பாபுராவ் தெரு, கிருஷ்ணப்ப தெரு, பிஎஸ்எஸ் கோயில் தெரு, கே.வி.செட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இக்கால்வாய்களை தூர் வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இப்பணி நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. நேற்று காலையும் இப்பணிகள் நீடித்தது. இதற்காக சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சத்துவாச்சாரி செல்லும் வாகனங்கள் மற்றும் ஆற்காடு சாலையில் இருந்து பழைய நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்றதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வேலூர்-ஆற்காடு சாலையில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை இரவு நேரத்தில் மேற்கொண்டு இருந்தால், எந்தவித சிரமமும் ஏற்பட்டிருக்காது. ஆனால் காலை நேரத்தில் தூர்வாருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் இந்த சாலையில் நாள்தோறும் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து போக்குவரத்தை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: