அனல் பறக்கிறது இடைத்தேர்தல் பிரசாரம், வெளியூர் ஆட்கள் முற்றுகையால் திக்குமுக்காடும் திருப்பரங்குன்றம்

* லாட்ஜ் புல், வீட்டு வாடகை ரூ. 1 லட்சம் வரை கிராக்கி

* டீ கடை ஓட்டல்களில் 500, 2000 ரூபாய் நோட்டுகள் பறக்கின்றன

இடைத்தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் திருப்பரங்குன்றத்தில் வெளியூர் ஆட்கள் குவிந்து முற்றுகையிடுவதால் திக்குமுக்காடுகிறது. லாட்ஜ்கள் புல் ஆனதால் வாடகை வீடுகளுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம். பங்களா தோற்றம் இருந்தால் ரூ.1 லட்சம் வரை கிராக்கி ஏறி நிற்கிறது. கூட்டம் மொய்க்கும் டீ கடை, ஓட்டல், டாஸ்மாக் கடைகளில் ரூ.500, ரூ.2000 என புது நோட்டுகள் பறக்கின்றன. மே 19ல் நடக்க இருக்கும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 13 நாள் இடைவெளி உள்ளது. இங்கு தலைவர்கள் பிரசாரம் தீவிரம் அடைந்து அனல் பறக்கிறது. இங்கு மதுரை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர் குவிந்து வருகின்றனர். தேர்தல் வரை இங்கேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளனர். இவர்கள் திருப்பரங்குன்றத்திலுள்ள லாட்ஜ்களை புக் செய்துள்ளதால் புல் ஆகிவிட்டது. இதனால் மதுரை நகர் பகுதியிலுள்ள லாட்ஜ்களை நோக்கி படையெடுக்கிறார்கள்.

தொகுதிக்குள் முகாமிட நினைப்பவர்கள் வாடகை வீடுகளை பிடித்துள்ளனர். அந்த வீடுகளில் தேர்தல் முடியும் வரை வாடகை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையிலும், பங்களா தோற்றம் இருந்தால் ரூ.1 லட்சம் வரை கிராக்கியாகி உள்ளது. லாட்ஜில் தங்கினால் போலீஸ், பறக்கும் படை சோதனை ஏற்படும் என பயந்து, வீட்டு வாடகை அதிகம் என்றாலும் அதை தேடி பிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். மாநகராட்சி பகுதியிலுள்ள 11 வார்டுகள் தவிர கிராம  பகுதி வீட்டு சுவர்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்களை வரையலாம் என்பதால், அதற்கு தனி ரேட் கொடுக்கின்றனர். பிரசாரத்தில் பட்டாசு வெடிப்பு, ஒலிபெருக்கி சத்தம், அணி வகுக்கும் கார்களின் சத்தம் காதை பிளக்கிறது. இது சிறுவர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது. எத்தனை பறக்கும் படைகள் பறந்தாலும் பணபுழக்கம் தங்குதடையின்றி பாய்கிறது. டீ வடை கடை, சைவ அசைவ ஓட்டல்கள். டாஸ்மாக் கடைகளில் கூட்டம் மொய்க்கிறது. இங்கு 500, 2000 ரூபாய் புதுபுது நோட்டுகளாக பறக்கின்றன. டீ கடைக்காரர்கள் சில்லரை கொடுக்க முடியாமல் திணறுகிறார்கள். சிலர் “பிறகு பாரக்கலாம்” என்று சில்லரை வாங்கமலேயே தாராளம் காட்டி செல்கிறார்கள்.  இந்த ெதாகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளில் 50 சதவீதம் விற்பனை ஏறி உள்ளன. இதனால் தொகுதி திக்குமுக்காடுகிறது.

தேர்தல் விதிமுறைப்படி மே 17ல் மாலை பிரசாரம் ஓய்ந்ததும், வெளியூர் ஆட்கள் தொகுதிக்குள் தங்க தடை உள்ளது. ஆனால் 18ம் தேதி விசாக திருநாள் என்பதால், அன்று திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த வண்ணம் இருப்பார்கள். மறு நாள் முருக கடவுளின் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. எனவே பறக்கும் படை பறந்து பணப்பட்டுவாடாவை தடுப்பதிலும், வெளியூர் ஆட்களை வெளியேற்றுவதிலும் போலீசாருக்கு கடும் சிக்கல் எழுந்துள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் சுயேட்சைகளின் முகவர் படிவத்தை பெற்ற அதிமுகவினர்சுயேட்சைகளிடம் இருந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான படிவத்தை அதிமுகவினர் பெற்றுக்கொண்டனர்.

 திருப்பரங்குன்றம் தொகுதியில் மொத்தம் 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் செலவாக அவர்கள் ரூ.28 லட்சம் வரை செலவு செய்ய அனுமதி உண்டு. செலவு கணக்கை முறையாக எப்படி பராமரிக்க வேண்டும். செலவுக்கான உரிய ஆவணத்தை முறையாக பெற்று, அதனை தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வுக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக முறையான பதிவேட்டை பராமரிக்க கோரி கடந்த 4ம் தேதி வேட்பாளர்களின் கூட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் வாக்குச்சாவடியில் பணியாற்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கான படிவம் வேட்பாளர்களிடம் கொடுக்கப்பட்டது. கூட்டம் முடிந்தவுடன், அதிமுகவினர் கும்பல், கும்பலாக கார்களில் வந்தனர். அவர்கள் உள்ளே புகுந்தது. 15க்கும் மேற்பட்ட சுயேட்சை வேட்பாளர்களை சூழ்ந்தனர். திடீரென்று அவர்களை அழைத்துக்கொண்டு கார்களில் ஏறி அதிமுகவினர் பறந்தனர். அவர்களிடம் இருந்த முகவர்களுக்கான  படிவத்தை பெற்றுக்கொண்டு திருப்பி அனுப்பிவிட்டதாக சுயேட்சைகள் சிலர் கூறினர்.

சுயேட்சைகளை சூழந்த அதிமுகவினர் வாக்கு எண்ணிக்கை  மையத்திற்கு வேட்பாளர்களின் முகவர்கள் நியமனம்வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வேட்பாளர்கள் தங்களது முகவர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

 மதுரை பாராளுமன்ற தொகுதியில் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. ஓட்டு பெட்டிகள் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் 6 அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகளுக்கு துணை ராணுவம், பட்டலியன் போலீஸ், உள்ளூர் போலீஸ் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் நடைபெற உள்ளது.   வாக்கு எண்ணிக்கை மையத்தில் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளது. ஒரு மேஜைக்கு வேட்பாளரின் ஒரு முகவர் வீதம் ஆறு தொகுதிக்கு 84 முகவர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தொகுதிக்கு ஒரு முகவர்கள் மற்றும் தலைமை முகவர்கள் என நியமிக்கப்பட உள்ளனர்.  இதன்படி, 27 வேட்பாளர்களும் தலா 86 பேர் வீதம் முகவர்களை நியமித்துள்ளனர். அவர்களிடம் புகைப்படம் பெறப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டை தயாரிப்பு பணி நடந்து வருகிறது.

வாட்ஸ்அப் குரூப்பில்  இணைந்த சுயேட்சைகள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும், சுயேட்சை வேட்பாளர்கள் இணைந்து  ‘வாட்ஸ்அப் குரூப்’ ஆரம்பித்துள்ளனர்.  திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைதேர்தலில் திமுக, அதிமுக, அமமுக, மநீம உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 37 பேர் களத்தில் உள்ளனர். இதில் சுயேட்சைகள் மட்டும் 30 பேர் போட்டியிடுகின்றனர். சுயேட்சைகள் 24 பேர் சேர்ந்து, ‘‘வாட்ஸ்அப் குருப்’’ ஆரம்பித்துள்ளனர். அதில் சுயேட்சைகள் தங்களின் தேர்தல் பணி, என்ன பிரச்சனையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் எங்கு பிரசாரம் செய்கின்றனர். உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை அவர்களுக்குள் பரிமாறிக் கொள்கின்றனர். கடந்த 30ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை மிகவும் வேகமாக செயல்பட்டு வந்த இந்த குரூப்பில் நேற்று எந்த பதிவும் இல்லை.

 இது குறித்து சுயேட்சை வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, ‘பகல், இரவு என பாரமல் இயங்கி வந்த சுயேட்சைகளுக்கான குருப் இன்று(நேற்று) பதிவு இல்லை. இதற்கு ஒரு வேட்பாளர் என்ன நமது குரூப் சத்தம் இல்லாமல் உள்ளதே என தெரிவித்து பதிவிட்டுள்ளார். பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்திருப்பதால், குரூப்பில் பதிவிடுவதற்கு கூட நேரமின்றி வேட்பாளர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கருதலாம். எனினும், சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் மக்கள் வரவேற்பு பல்வேறு நிலைகளில் இருக்கிறது. இது தேர்தல் முடிவின் போது ஓட்டு எண்ணிக்கையில் தெரிய வரும். இந்த குரூப் மூலம் தேர்தல் தொடர்பான பிரச்சனைகளை நாங்கள் ஒட்டுமொத்தமாக தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்கவும், தீர்வு காணவும் வாய்ப்பாக உள்ளது’ என்றார்.

பதிவுபோட நேரமின்றி பிஸி... இரண்டு கட்சிகள் உங்களைஏழைகளாக வைத்துள்ளனர்

திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் இரண்டாம் நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார்.நேற்று நாகமலை புதுக்கோட்டை, தனக்கன்குளம், பர்மா காலணி, சீனிவாச காலனி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இப்பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. அது மட்டும் இல்லை சாக்கடை மூலம் வரும் வியாதிகளை குணப்படுத்த சரியான மருத்துவமனை இல்லை.உங்களை ஏழைகளாக வைத்துள்ளனர் அப்போது தான் உங்களை தேர்தல் வரும் போது விலைக்கு வாங்க முடியும். தமிழகத்தில் இருக்கும் இரண்டு கட்சிகள் கார்பிரேட் கம்பெனி போல் செயல்படுகின்றன.எங்களுக்கு பிரச்சாரம் செய்ய அனைத்து இடங்களிலும் அனுமதி மறுக்கப்படுகிறது. என் வாழ்க்கை முழுவதும் மக்களுக்காக தான். 60 வயது வரை மக்கள் எனக்கு ஆதரவு அளித்தனர் என்னை நேரில் பார்க்காமலே. இந்த வண்டி ஓட்டுவதற்கு காரணம் மக்கள் தான். எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்ற பின் தவறு செய்தாலும் மற்ற கட்சியின் தவறை சுட்டிக் காட்டுவது போல் எங்கள் வேட்பாளரை உங்கள் முன் நிற்க வைப்பேன்.என கூறி டார்ச் லைட் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

கமலஹாசன் குற்றச்சாட்டு

நழுவினார் கமல்...

திருப்பரங்குன்றம் தொகுதி திருவள்ளுவர் நகரில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கமலஹாசன் வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர் இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் எதுவும் செய்யவில்லை என கூறினார்.அப்போது கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என தொடர்ச்சியாக கேட்கவே அதை கவனித்த கமலஹாசன் உங்கள் கேள்விகளுக்கு நாளை சக்திவேல் வந்து பதிலளிப்பார் என கூறி அங்கிருந்து நழுவினார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில்திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஆதரவு திரட்டினார்

திருப்பரங்குன்றம் தொகுதியில் டி.ஆர்.பாலு நேற்று ஆதரவு திரட்டினார். இன்று துரைமுருகன் வருகிறார்.திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு நேற்று திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து கிராமம், கிராமமாக சென்று ஆதரவு திரட்டினார். சிந்தாமணியில் சமுதாய முக்கிய பிரமுகர் சோமுசுந்தரம்பிள்ளையை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு கேட்டார். இதை தொடர்ந்து புளியங்குளத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் யாசின் முகமதுவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். மதுரை மகபூப்பாளையத்திலுள்ள மார்க்சிய கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர்கள் விஜயராஜன், ராமகிருஷ்ணன் மற்றும் பலர் வரவேற்றனர். அங்கு அந்த கட்சியினருடன் திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. பங்கேற்றார்.திமுக பொருளாளர் துரைமுருகன் மே 7ம் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

குப்பைக்கு போன கொடிகள்..!

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீரகனூர், அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வீரகனூர் பகுதியில் அதிமுக கொடிகள் குப்பையில் விழுந்து கிடந்தன. அப்பகுதி வழியாக நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சென்றனர்.  அனைவரும் குப்பையில் விழுந்த கொடியை பார்த்து கொண்டே சென்றனர். ஆனால் ஒருவர் கூட அந்த கொடியை எடுத்து வைக்க முன்வரவில்லை. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் குப்பையில் கிடக்கும் கொடியை கூட எடுத்து வைக்க முன்வராதவர்கள் எப்படி மக்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பார்கள் என புலம்பியபடி சென்றனர்.

Related Stories: