புளியங்குடி பவானியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழா துவங்கியது

புளியங்குடி, ஏப். 26: புளியங்குடி பவானியம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா நாள்கால் நடுதல் விழா துவங்கியது. வருகிற 30ம் தேதி அக்னி சட்டி ஊர்வலம் நடக்கிறது. அருள் வாக்கிற்கு பிரசித்திப் பெற்ற புளியங்குடி முப்பெரும்தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானிஅம்மன், பால நாகக்கன்னிஅம்மன், பாலநாகம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டிற்கான திருவிழா, கடந்த 23ம் தேதிகால் நடுதல் விழாவுடன் துவங்கியது. இதையொட்டி முப்பெரும்தேவியர் பவானியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள் உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகங்களுடன் பெரிய தீபாராதனை நடந்தது. மேலும் முப்பெரும்தேவியர் பவானியம்மன் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விரதமிருந்த பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் கோயில் குருநாதர் சக்தியம்மா பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு, சிறப்பு அருள்வாக்கு வழங்கினார்.

மாலை 6 மணிக்கு முளைப்பாரி கும்மிப்பாட்டில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா நாட்களில் தினமும் முப்பெரும்தேவியர் பவானி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், மாலை சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு, முளைப்பாரி கும்மிப்பாட்டு நடைபெறும். 8ம் நாள் திருநாளான 30ம் தேதி காலை 7 மணிக்கு தீர்த்தக்குடம், பால்குடம் ஊர்வலம் நடக்கிறது. புளியங்குடி சாலைவிநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலம் துவங்கி கோயிலில் முடிவடைகிறது.

அங்கு முப்பெரும்தேவியர் பவானியம்மனுக்கு காலை 11 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு 300க்கும் மேற்பட்ட அக்னி சட்டிகள், பூப்பெட்டி, முத்துப்பெட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  பின்னர் அக்னி காவடி, ஆயிரம் கண்பானை ஆகிய நேர்த்தி கடன் செலுத்துதல் நிகழ்ச்சி நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு சாமபூஜை, அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மே 1ம் தேதி காலை 6 மணிக்கு கோயில் முன்பு பொங்கலிடுதல், 8 மணிக்கு விரதமிருந்த பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வருதல், மதியம் 1மணிக்கு அன்னதானம் நடக் கிறது. மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் சித்திரை பெருந்திருவிழா நிறைவுபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் குருநாதர் சக்தியம்மா மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: