கோவில்பட்டி, டிச. 18: கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் நகர் பகுதியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குண்டும் குழியுமான சாலையில் பொதுமக்கள் சிரமத்துடன் பயணித்து வருகின்றனர். மழை காலங்களில் சாலைகள் சேறும், சகதியும் காணப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாத சூழல் உள்ளது. அவ்வப்போது வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி இப்பகுதி பொதுமக்கள் சாலையில் தேங்கி கிடந்த மழைநீரில் நாற்று நட்டி, குலவையிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், கோரிக்கை மனுவை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கினர். அப்போது சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
