கோரிக்கைகளை வலியுறுத்தி கோயில் பணியாளர்கள் மீண்டும் போராட முடிவு

மதுரை, ஏப்.25:  25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோயில் பணியாளர் சங்க கூட்டமைப்பினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். தமிழகத்தில் மதுரை மீனாட்சியம்மன், பழனி முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் உட்பட 36 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பல ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றி அமைத்தது போல், கோயில் பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு, பணிக்கொடை, ஓய்வூதியம், ஊதிய நிர்ணய முரண்பாடுகளை அகற்றுதல் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகள் அறநிலைத்துறை கமிஷனர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. அதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஊழியர்கள் அறப்போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். கோயில்களில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த தேதி அறிவித்தபோது, கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம் என இந்து அறநிலைத்துறையினர் கூறியதன் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதன் பின்னரும் பல மாதங்கள் கடந்தும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

இதனால் ஓய்வு பெற்ற ஊழியர்களும் பணி பலன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கோயில் பணியாளர் சங்க கூட்டமைப்பினர் கூறுகையில், ‘‘கோயிலில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, பணிக்கொடை கிடைக்காமல் பல ஆண்டு காலமாக தவித்து வருகின்றனர். இதேபோல் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். கோரிக்கை குறித்து பல முறை கோயில் கமிஷனரிடம் கோரிக்கை வைத்தும், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை. கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி  ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிப். 28க்குள் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த உத்தரவையும் இந்து அறநிலைத்துறை நிறைவேற்றவில்லை. இதனால் ஊழியர்கள் பெரும் பாதிப்புக்குளாகி உள்ளனர். எனவே, மீண்டும் கூட்டமைப்பு சார்பில் அறப்போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டம் மதுரையில் துவங்கும். விரைவில் தேதி அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: