மதுரை மாநகராட்சியில் 1,256 வாக்குச்சாவடிகள்

மதுரை, ஏப். 25: மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு மொத்தம் 1,256 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதன் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக உள்ளாட்சிகளின் வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த பகுதிகளுக்கு வார்டுகளும் தயாரிக்கப்பட்டது. அதனை வரைவு வாக்குசாவடி பட்டியலாக நேற்று வெளியிடப்பட்டது. மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து மண்டலம்-1க்கு 28 வார்டுகளும், மண்டலம்-2க்கு 26 வார்டுகளும், மண்டலம் 3க்கு 19 வார்டுகளும், மண்டலம் -4க்கு 27 வார்டுகளும் என பிரிக்கப்பட்டன. புதிய வார்டுகள் அடிப்படையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குச்சாவடி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மண்டலம்-1ல் 338 வாக்குச்சாவடிகளும், மண்டலம்-2ல் 319 வாக்குச்சாவடிகளும், மண்டலம்-3ல் 284 வாக்குச்சாவடிகளும், மண்டலம்-4ல் 315 வாக்குசாவடிகள் என மொத்தம் மதுரை மாநகராட்சியில் 1,256 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் மதுரை மாநகராட்சி உள்ள அனைத்து மண்டல அலுவலகத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால், எழுத்துபூர்வமாக வரும் மே 3ம் தேதிக்குள் மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் வழங்கலாம். ஆட்சேபனை கருத்துகளை பரிசீலித்து திருத்தம் செய்யப்பட்டு, இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படும்.

Related Stories: