மாவட்டம் முழுவதும் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன

தேனி/தேவதானப்பட்டி, ஏப். 24: தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று காலை வரை விடிய,விடிய பெய்ததால் பூமி குளிர்ச்சியடைந்தது.  தேனி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதகாலமாக  கடும் வெயில் கொளுத்தி வந்தது. காலை 7 மணிக்கே துவங்கி விடும் வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் தேனி நகர் மதுரை ரோடு, கம்பம் ரோடு, பெரியகுளம் ரோட்டில் மக்கள் நடமாட்டம் பகல் வேளையில் வெகுவாக குறைந்து போனது. வெயிலின் தாக்கத்தால் இளநீர், சர்பத், பழச்சாறு கடைகளில் கூட்டம் அலைமோதியது.

 நேற்று முன்தினம் காலை முதல் வெயில் தாக்கம் அதிகமாகவும், பெரிய அளவில் புழுக்கமுமாக இருந்தது. நேற்று முன்தினம் மாலை திடீரென தேனி மட்டுமல்லாது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை தொடங்கி, இரவு முழுவதும் விடிய, விடிய பெய்ததால் கடந்த ஒன்றரை மாதமாக காய்ந்து போயிருந்த பூமி குளிச்சியடைந்தது. தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, தர்மலிங்கபுரம், நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, சந்திராபுரம், மருகால்பட்டி, குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்து இரவு முழுவதும்  மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் அவற்றை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் குறுக்கே ஆங்காங்கே மரங்கள் சாய்ந்ததால் இரவு நேரங்களில் போக்குவரத்து பாதித்தது. பின்னர் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. தேவதானப்பட்டி முருகமலையில் பெய்த கனமழையால் தடுப்பணைகள் நிரம்பின. மேலும் சூறைக்காற்றால் மாவட்டம் முழுவதும் 330 ஏக்கரில் வாழை, கரும்பு, முருங்கை மரங்கள் நாசமாயின. நேற்று முன்தினம் பெய்த மழையின் அளவு விபரம் வருமாறு(வினாடிக்கு): ஆண்டிபட்டி 18 மிமீ, அரண்மனைப்புதூர் 15.2 மிமீ, போடி 15.4 மி.மீ, கூடலூர் 53 மி.மீ, மஞ்சளாறு 73 மி.மீ, பெரியகுளம் 63 மி.மீ, பெரியாறு அணை  2.6 மி.மீ, தேக்கடி  5.6 மி.மீ, சோத்துப்பாறை  48 மி.மீ, உத்தமபாளையம் 37.6 மி.மீ, வைகை அணை  31.2 மி.மீ,  வீரபாண்டி 37 மி.மீ  மழை பதிவாகியுள்ளது.

Related Stories: