எழுமலை அருகே எம்.கல்லுப்பட்டியில் பெண்கள் துடைப்பத்துடன் சாலை மறியல்

உசிலம்பட்டி, ஏப். 24: எழுமலை அருகே பெண்களை இழிவுபடுத்தியதைக் கண்டித்து துடைப்பத்துடன் சாலை மறியல் நடந்தது. பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுமலை அருகேயுள்ளது துள்ளுக்குட்டி நாயக்கனூர். இந்த ஊர் கிராமத்திலுள்ள பெண்கள் மற்றும் பொதுமக்கள் குறிப்பிட்ட ஒரு பிரிவு இனப்பெண்களை இழிவுப்படுத்தி வாட்சப்பில் வீடியோ வெளியிட்டதைக் கண்டித்து, துடைப்பக்கட்டை, செருப்புகளை ஏந்தி டி.கிருஷ்ணாபுரம் எம்.கல்லுப்பட்டி சாலை பிரிவிலிருந்து சாணார்பட்டி, எம்.கல்லுப்பட்டி பஸ்நிலையம், எழுமலை சாலை வழியாக கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்தனர்.

அதன் பிறகு எழுமலை-டி.கிருஷ்ணாபுரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து எழுமலை இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின்மும்தாஜ் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாமல் தொடர்ந்து பொதுமக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். அதன் பின்னர் உசிலம்பட்டி டி.எஸ்.பி, ராஜா போராட்டக்காரர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உறுதியளித்தார். அதன் பின்பு சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: