இரணியல் அருகே துணிகரம் டாஸ்மாக் கடையை உடைத்து மது, பணம் கொள்ளை

திங்கள்சந்தை, ஏப். 23: இரணியல் அருகே டாஸ்மாக் கடை ஷட்டரை உடைத்து கொள்ளை கும்பல் ₹10 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டத்தில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு, பூட்டி கிடக்கும் வீடுகள், டாஸ்மாக் கடைகளில் கைவரிசை என்று தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.இந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் மூலம் கொள்ளையர்கள், போலீசாருக்கு சவால் விடும் வகையில் செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பலை பிடிக்க போலீசார் குறி வைத்தாலும் கும்பல் சிக்குவதில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரணியல் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை நடந்துள்ளது.இரணியல் கீழமணியங்குழி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடை அமைந்துள்ள இடம் ஆள்நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியாகும். 20ம் தேதி இரவு பணியாளர்கள் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் பணியாளர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கடையில் இருந்து ₹10 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், மேஜையில் இருந்த ₹9,500 மற்றும் சிசிடிவி கேமரா, அதன் உபகரணங்கள் ஆகியவற்றை கொள்ளை கும்பல் எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து கடை சூப்பர்வைசர் மைக்கேல்ராஜ், இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் இரணியல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: