குடிநீருக்காக அல்லாடும் 10 கிராம மக்கள் ஊற்று நீரை தேடி குவியும் பரிதாப நிலை

மேலூர், ஏப். 22: குடிநீரை தேடி தினசரி பல கிமீ. தூரம் அலையும் கிராம மக்களுக்கு ஊற்று நீர் கைகொடுப்பதால், தினசரி அங்கு காத்திருந்து தண்ணீர் சேகரிக்கும் கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலூர் அருகே கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ளது கம்பூர் ஊராட்சி. இப்பகுதியில் எப்போதும் தண்ணீர் பிரச்சனை இருக்கும். வெயில் காலங்களில் இது மேலும் அதிகரிப்பது வழக்கம். இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதால் குடிநீருக்கு கிராம மக்கள் தினசரி தண்ணீரை தேடும் நிலை உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள அருவி மலை அடிவாரத்தில் ஊற்றில் நீர் ஊறுவதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்து.

அங்கு சென்று தரையில் அமர்ந்து அந்த ஊற்றில் ஊறும் தண்ணீரை சிறிது சிறிதாக சேகரித்து எடுத்து வர ஆரம்பித்தனர். இப்பகுதியில் உள்ள அய்வத்தாம்பட்டி, பட்டூர், தனக்கம்பட்டி, வீரசூடாமணிபட்டி, பால்குடி, வெள்ளூத்துப்பட்டி, களப்பாறை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இந்த நீர்ஊற்று தண்ணீர் வழங்கி வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் இந்த நீர் ஊற்றில் தண்ணீர் எடுக்க அதிகமாக மக்கள் கூட்டம் வரும். சைக்கிள், டூவீலர்களில் வந்தும் இந்த ஊற்றில் இருந்து தண்ணீர் எடுத்து செல்வார்கள். இந்த ஊற்றில் வெயில் காலங்களில் மட்டுமே தண்ணீர் வரும் என்பதும், மழை காலங்களில் இதில் தண்ணீர் வராது என்பதும் ஆச்சரியமான விஷயம் என்று கூறினார்.

Related Stories: