பேரையூர் அருகே குண்டும், குழியுமாகிய பைபாஸ் சாலை

பேரையூர், ஏப். 22: பேரையூர் அருகே பைபாஸ் சாலை குண்டும், குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் கிடப்பதால் பல வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. மதுரை மாவட்டம், பேரையூர் அருகே சிலைமலைப்பட்டி முதல் எம். சுப்புலாபுரம் பிரிவு வரை பைபாஸ் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த பைபாஸ் சாலை பேரையூர் முக்குச்சாலையிலிருந்து பேரையூர் புறவழிச்சாலையாக இருப்பதால் அனைத்து வகை கனரக வாகனங்களும், அதிகமாக இந்த சாலையையே பயன்படுத்துகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் அதிக கிலோ மீட்டர் தூரமுள்ள பேரையூர், டி.கல்லுப்பட்டி, வழியாக செல்வதற்கு பதிலாக இந்த புறவழிச்சாலை வழியாக சென்றால் அதிக தூரம் மிஞ்சுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை சிலைமலைப்பட்டியிலிருந்து எம்.சுப்புலாபுரம் வரை குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் அதிக லோடுகளுடன் கச்சாபொருட்களை கொண்டுவரும் லாரிகள் அச்சு முறிந்து சிலநேரங்களில் பழுதாகி நின்று விடுகிறது. இதனால் உரியநேரங்களில் தொழிற்சாலைகளுக்கு பொருட்களை கொண்டுசெல்ல முடியாமல் போகிறது. மேலும் இந்த சாலையில் டூவீலர்களில் செல்பவர்கள் பள்ளங்களில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமான விபத்துக்கள் நடக்கிறது. இதனால் பலர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு சென்றுள்ளனர். மேலும் உயிர்சேதங்கள் ஏற்படும் முன்பு இந்த சாலையை விரைவில் சரிசெய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: