சமூகத்தினரை இழிவுபடுத்தியவர்களை கைது செய்யக்கோரி மேலூர் பகுதியில் 3வது நாளாக தொடர்ந்து மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மேலூர், ஏப். 22: ஒரு சமூகத்து பெண்களை இழிவுபடுத்தி பேசி வீடியோ வெளியிட்டவர்களை உடனடியாக கைது செய்ய கோரி மேலூர் நான்குவழிச்சாலையில் 3ம் நாளாக நடைபெற்ற சாலை மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு சமூகத்து பெண்களை இழிவுபடுத்தி பேசி சில தினங்களுக்கு முன்பு 2 மர்ம நபர்கள் வீடியோவை வெளியிட்டனர். இது வாட்ஸ் அப் மூலம் வைரலாக பரவியது. இதனை கண்டித்தும் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதிகளில் தொடர் ரோடு மறியல், போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கொட்டாம்பட்டி பாண்டாங்குடி நான்குவழிச்சாலையில் 3 மணி நேரம் ரோடு மறியல் நடைபெற்றது. போலீசார் சமாதானத்தை தொடர்ந்து அப்போதைக்கு கலைந்து செல்லும் மக்கள் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. நேற்று கருங்காலக்குடி நான்குவழிச்சாலையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரி மறியலில் ஈடுபட துவங்கினர். சம்பவ இடத்திற்கு ஏடிஎஸ்பி நரசிம்மவர்மன், மேலூர் டிஎஸ்பி சுபாஸ் ஆகியோர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். வீடியோ வெளியிட்ட நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியதை தொடர்ந்து போராட்டகாரர்கள் கலைந்து சென்றனர். இப் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் நான்குவழிச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அலங்காநல்லூர்

இதேபோல், அலங்காநல்லூர் கேட்டுகடையில் 600க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் துடைப்பத்துடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சமுகவலைதளங்களில் தங்கள் சமுதாய பெண்களை தரக்குறைவாக வெளியிட்ட நபர்களை கைதுசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த மறியலில் வலசை, கம்மாளப்பட்டி, நெடுங்குளம் உள்ளிட்ட பல கிராம மக்கள் சுமார் 600க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர். இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மோகன்குமார், நல்லு மற்றும் போலீசார்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை மனு ஒன்றும் கொடுத்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததன் பேரில் அவர்கள் கலைந்துசென்றனர்.

Related Stories: