பலத்த காற்றுடன் திடீர் மழை கோவில்பட்டி அருகே வாழைகள் சேதம்

கோவில்பட்டி, ஏப். 22: கோவில்பட்டி அருகே மழையுடன் பலத்த காற்று வீசியதில் குலை தள்ளிய நிலையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதமடைந்தது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உருளைகுடி கிராமத்தை சேர்ந்த பெரியவேலு மகன் சண்முகராஜ்(45) விவசாயியான இவர் வரதம்பட்டி கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் நாட்டு ரக வாழை பயிரிட்டுள்ளார். கிணற்று பாசனம் மூலம் ஆயிரக்கணக்கான வாழைகளை வளர்த்து வந்தார். தற்போது வாழைகள் நன்றாக வளர்ந்து குலைகள் வெட்டும் பருவத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கோவில்பட்டி பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் வரதம்பட்டியில் சண்முகராஜ் நிலத்திலிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து விழுந்தன. இதன் சேதமதிப்பு சுமார்ரூ.5 லட்சம் ஆகும். தகவலறிந்த வருவாய்த்துறை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று காற்றில் சாய்ந்து நாசமான வாழைகளை பார்வையிட்டனர்.

சேதமடைந்த வாழைகள் விபரங்களையும், இழப்பீடு தொகை வழங்குவது குறித்தும் மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்வதாக வேளாண்மை துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாயி சண்முகராஜிடம் தெரிவித்தனர்.

 இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி சண்முகராஜ் கூறுகையில்; வாழை பயிரிடுவதற்காக வங்கியில் கடன் பெற்றும், நகைகளை அடகும் வைத்துள்ளேன். வாழைகள் சேதமடைந்துள்ளதால் என்னசெய்வதென்று தெரியவில்லை. பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு மாவட்ட நிர்வாகமும், அரசும் உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டுமென கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Related Stories: