தங்க நகைகளை விமானத்தினுள் வீசிவிட்டு இறங்கிய துபாயில் இருந்து வந்த வாலிபர் திருச்சி ஏர்போர்ட்டில் கடத்தல் 4 பேர் கைது, 2 பேருக்கு வலை

திருச்சி, ஏப்.18:   அரியலூர்  மாவட்டம், செந்துறை பெரியகுறிச்சியை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (37), இவர் துபாயில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் துபாயில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தார். இவரை வரவேற்க உறவினர்கள் வந்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த கொளஞ்சிநாதனிடம் 2 பேர் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் அவர்களுடன் பைக்கில் சென்ற கொளஞ்சிநாதன் பின்னர் திரும்பி வரவே இல்லை. இதனால் விமான நிலைய போலீசில் கொளஞ்சிநாதன் தந்தை சின்னதம்பி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர். அப்போது பைக்கில் கொளஞ்சிநாதன் செல்வது தெரியவந்தது. அந்த பைக் நம்பரைக்கொண்டு போலீசார் துப்பு துலக்கியதில் அந்த பைக் திருச்சி வரகனேரியை சேர்ந்த வாகித்துக்கு சொந்தமானது என தெரியவந்தது. எனவே வாகித்தை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரது கஸ்டடியில் இருந்து கொளஞ்சிநாதனை போலீசார் மீட்டு விசாரித்தனர். அப்போது அவரை கடத்தியது குறித்து தகவல் தெரியவந்தது.

திருச்சி வந்த ெகாளஞ்சிநாதனிடம், துபாயில் இருந்து ஒருவர் 5 பவுன் தங்க நகைகள் கொடுத்து உள்ளார். வாகித் என்பவர் திருச்சி விமான நிலையத்தில் உங்களை பார்ப்பார். அவரிடம் இதை கொடுத்து விடுங்கள். அவர் உங்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுப்பார் என கூறி உள்ளார். ரூ.5 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு அதை வாங்கி வந்துள்ளார். விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது அருகில் அமர்ந்திருந்தவரிடம் பேசுகையில்,  அவர், நகையை கொண்டு வரும் உன்னை விமான நிலைய சோதனையில் அதிகாரிகள் பிடித்து விடுவார்கள் என்று கூறியதும், பயந்து போன கொளஞ்சிநாதன் அந்த நகையை தனது சீட்டுக்கு எதிர் சீட்டில் வீசிட்டு விமானத்தை விட்டு இறங்கி வந்துள்ளார். விமான நிலையத்தில் சந்தித்த வாகித், கொளஞ்சிநாதன் தான் நகையை மறைத்து வைத்து விட்டு பொய் சொல்கிறார் என கருதி கடத்தி நகை மற்றும் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

இதைத்தொடர்ந்து பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அடைத்து வைத்திருந்த கொளஞ்சிநாதனை மீட்ட போலீசார் அறையிலிருந்த சாதிக் அலி, திப்புசுல்தான், பயாஸ், அஸ்லாம் ஆகிய 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் கடத்தி சென்ற வாகித், யூசுப் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: