கொல்லிமலையில் மீண்டும் காட்டுத்தீ ஆயிரக்கணக்கான மூலிகை மரங்கள் அழியும் அபாயம்

சேந்தமங்கலம், ஏப்.16: கொல்லிமலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான மூலிகை மரங்கள் எரிந்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடும் வறட்சி காரணமாக, வனத்தில் மரங்கள் காய்ந்து அதன் சருகுகள் கொட்டியுள்ளது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வனப்பகுதியில் ஆங்காங்கே தீப்பிடித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கொல்லிமலை அடிவாரத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 200 ஏக்கரில் மரங்கள் எரிந்து சாம்பலானது. இந்நிலையில், நேற்று மாலையில் இருந்து 55வது கொண்டை ஊசி வளைவு முதல் 63வது கொண்டை ஊசி வளைவு வரை உள்ள அடர்ந்த வனப்பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதில், 1000க்கும் மேற்பட்ட மரங்கள் எரிந்து நாசமாகி வருகிறது.

நாமக்கல் வனத்துறை சார்பில் 100க்கும் மேற்பட்ட தீத்தடுப்பு குழுவினர், வனத்திற்குள் சென்று தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். ஆனால், தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘குறிப்பிட்ட வனப்பகுதிக்கு சென்று மட்டுமே தீயை அணைக்க முடியும். உள்வனப்பகுதியில் அரியவகை மூலிகை மரங்கள் உள்ளது. இந்த காட்டு தீயால் அவை முற்றிலும் அழிந்து விடும் சூழல் நிலவுகிறது. தீத்தடுப்பு குழுவினரை மட்டும் வைத்து கொண்டு தீயை அணைக்க முடியாது. எனவே, ஹெலிகாப்டர் உதவியுடன் உடனடியாக தீயை அணைக்க நடவடிக்கை வேண்டும். இல்லையெனில், கொல்லிமலை வனப்பகுதி முழுவதும் உள்ள மூலிகை மரங்கள் அழிந்து விடும்,’ என்றனர்.

Related Stories: