சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டர்கள் திறப்பு முதல் நாளில் 3 பேருக்கு அறுவை சிகிச்சை

மதுரை, ஏப். 16: மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கட்டப்பட்ட ஆபரேஷன் தியேட்டர்கள் நேற்று முதல் திறக்கப்பட்டன. முதல் நாளில் குடல் இரைப்பை நோயாளிகள் 3 பேருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. மதுரையில் ரூ.150 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதில் நரம்பியல், சிறுநீரகவியல் மற்றும் குடல் இரைப்பை ஆகிய மூன்று வெளிநோயாளிகள் மருத்துவ பிரிவுகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. முதல் தளத்தில் கட்டப்பட்ட 6 அறுவை அரங்குகள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தன. இந்த அறுவை சிகிச்சை அரங்குகளை மருத்துவமனை டீன் வனிதா நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா, அறுவை சிகிச்சைத் துறைத்தலைவர்கள், சரவணன் (நரம்பியல்), ராஜா (சிறுநீரகவியல்), பத்மநாபன் (குடல் இரைப்பை), ஆர்.எம்.ஓ.லதா, ஏ.ஆர்.எம். காயத்ரி மற்றும் உதவி மருத்துவர்கள் உடனிருந்தனர். நேற்று செயல்பாட்டுக்கு வந்த அறுவை அரங்குகளில் குடல் இரைப்பை நோயாளிகள் 3 பேருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இன்று முதல் சிறுநீரகவியல் மற்றும் நரம்பியல் நோயாளிகளுக்கும் அறுவை சிகிச்சை நடைபெறும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Stories: