மதுரை, ஏப்.11: மதுரை மக்களவை தொகுதி தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சாப்ட்வேர் பொருத்துவதில் 3 நாட்களாக காலதாமதம் ஏற்பட்டதால், பெல் நிறுவன பொறியாளர்களுடன் பார்வையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம், பெயர் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணி கடந்த 8ம் தேதி துவங்கியது. மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 2 இடங்களிலும், மாநகராட்சி பில்லர் அரங்கில் 4 இடங்களிலும் இப்பணி நடந்தது. பொதுவாக மின்னணு வாக்கு இயந்திரத்தில், வேட்பாளர் சின்னம், பெயர் பொருத்தும் பணி சுமார் 5 மணி நேரத்தில் முடிந்து விடும். உடனே வேட்பாளர்கள் ஏஜென்ட்டுகள் முன்னிலையில் அரங்கில் வைத்து சீல் வைக்கப்படும். ஆனால் இந்த தேர்தலில் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை வாக்காளர் தெரிந்து கொள்ளும் வகையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் விவிபெட் இயந்திரம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில், வேட்பாளர்களின் வரிசை எண், பெயர், சின்னம் மட்டும் தெரியும். இதற்காக தனி சாப்ட்வேரை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.
இந்த இயந்திரத்தில் இவற்றை பதிவேற்றம் செய்ய பெல் நிறுவனத்தில் இருந்து பொறியாளர் சிவலிங்கா தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் மதுரை வந்தனர். அவர்கள் கடந்த 8ம் தேதி முதல் விவிபெட்டில் சாப்ட்வேரை பதிவேற்றம் பணியில் ஈடுபட துவங்கினர். முதல் நாள் தேர்தல் ஆணையத்தின் சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்யவே ஒரு நாள் எடுத்துக்கொண்டனர். இதனால் மறுநாள் 9ம் தேதி முதல் விவிபெட்டில் சாப்ட்வேரை பதிவேற்றம் செய்யும் பணி துவங்கியது. ஒரு இயந்திரத்தில் சாப்ட்வேரை பதிவேற்றம் செய்ய குறைந்தது 10 நிமிடத்திற்கு மேல் ஆனது. மதுரை வடக்கு தொகுதியில் 310 வாக்குச்சாவடிக்கு கடந்த 2 நாட்களில் 160 இயந்திரத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்தனர். இதனால் மின்னணு வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்த வந்த ஊழியர்கள் கடந்த 3 நாட்ளாக காத்துக்கிடந்தனர். சின்னம் பொருத்துவதில் காலதாமதம் ஏற்படுவதை கண்ட தேர்தல் பொதுபார்வையாளர் வினோத்குமார், கலெக்டர் நடராஜன் ஆகியோர் பெல் பொறியாளர்களிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு பொறியாளர்கள், ‘‘போதிய அளவு வசதி இல்லை. ஒரு இயந்திரத்தில் பதிவேற்றம் செய்ய குறைந்தது 10 நிமிடம் ஆகும். காலதாமதம் ஆகதான் செய்யும்’’ என்றனர். இதனை பார்வையாளர் ஏற்க மறுத்தார். இன்றைக்குள்( நேற்று) பணியை முடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினார். இதுதொடர்பாக பெல் நிறுவன ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையை வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு பெல் நிறுவன உயர் அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து விரைவில் பணியை முடித்துக்கொடுங்கள் என பெல் நிறுவன பொறியாளர்களிடம் பார்வையாளர் கேட்டுக்கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.