மதுரை, நவ. 16: மதுரை மாநகராட்சியின் 10வது வார்டு பகுதியில் உள்ள மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே பிரஸ் காலனியில் எரிவாயு மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி ஒத்துழைப்புடன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் ரூ.1.02 கோடியும், தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சமும் சேர்த்து ரூ.1.51 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய அதிநவீன மின் எரிவாயு தகன மயானத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் புதிய மின் மயானத்தை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சுந்தரலிங்கம், துணைத்தலைவர்கள் தனுஷ்கோடி, ரமேஷ், செல்வம், இணைச் செயலாளர்கள் கணேசன், செந்தில்குமார், மின் மயான பராமரிப்புகுழு தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறந்தவர்களின் சடலங்களை இந்த மையத்தில் மின்சாரம் உதவியுடன் எரியூட்ட ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை உடலை மின் மயானத்தில் தகனம் செய்யலாம். இந்த மின் மயானம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தால் பராமரிக்கப்படும்.
The post ரூ.1.51 கோடியில் நவீன மின் எரிவாயு மயானம்: துணைமேயர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.