மாநகராட்சி கோரிக்கையை ஏற்று செல்லூர் கண்மாயில் உபரிநீர் வெளியேற்றும் புதிய திட்டம்: நிதியை உயர்த்த நீர்வளத்துறை கோரிக்கை

மதுரை, நவ. 10: மதுரையில் உள்ள செல்லூர் கண்மாயிலிருந்து உபரிநீர் வெளியேற அமைக்கப்பட்ட தற்காலிக கால்வாயை ‘கட் அண்ட் கவர்’ கால்வாயாக மாற்றும் திட்டத்திற்கு, மாநகராட்சியின் கோரிக்கையை ஏற்று நீர்வளத்துறை தரப்பில் அரசிடம் கூடுதல் நிதி கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக, மதுரை மாவட்டத்தில் கடந்த மாதம் இரண்டாவது வாரம் முதல் பெய்த மழையால், மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள நீர்வளத்துறைக்கு சொந்தமான கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தன. குறிப்பாக, கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை பெய்த கனமழையால், மாநகரின் மைய பகுதியில் உள்ள முக்கிய நீராதாரமான செல்லூர் கண்மாயிலிருந்து உபரிநீர் வெளியேறி, தாழ்வான பகுதிகளில் தேங்கியது. வெள்ள பாதிப்பை தடுக்க, செல்லூர் – குலமங்கலம் சாலையில், இரவோடு இரவாக 290 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலத்திற்கு தத்தனேரி அணுகுசாலையை கடந்து, வைகை ஆறு வரை தற்காலிகமாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், அணுகுசாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை ‘கட் அண்ட் கவர்’ கால்வாயாக மாற்றும் திட்டத்திற்கு, நீர்வளத்துறை தரப்பில் ரூ.11.90 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு கடந்த, 30ம் தேதி அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். எனினும், இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை. இச்சூழலில், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி செல்லூர் கண்மாய் மற்றும் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

அப்போது, நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில், ‘கட் அண்ட் கவர்’ கால்வாய் திட்டம், வெள்ள பாதிப்புக்கான காரணம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இதைத்தொடர்ந்து, திட்டத்திற்கான மதிப்பீட்டில் மாற்றம் செய்யப்பட்டு, கூடுதல் நிதி ஒதுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வின்போது, மாநகராட்சி தரப்பில் கட் அண்ட் கவர் கால்வாய் பணிகளை செய்யும் முன், தத்தனேரி மேம்பால அணுகுசாலையில் செல்லும், முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களை இடமாற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிதியுடன் சேர்த்து மொத்தமாக, ரூ.15.10 கோடி ஒதுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட வருவாய் நிர்வாக ஆணையர், அப்பணிகளை மேற்கொள்ளும் விதமாக, அரசிடம் கோரும்படி உத்தரவிட்டார். அதன்படி, கூடுதல் நிதி கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். ஏற்கனவே திட்டம் குறித்து முதல்வர் அறிவித்திருந்தாலும், அரசாணை வெளியாகாததால் பணிகள் துவங்கப்படவில்லை. எனவே, எங்களின் கோரிக்கையை ஏற்று, ரூ.15.10 கோடிக்கு அரசாணை வெளியிட்டால், பணிகளை உடனடியாக துவக்க முடியும். இவ்வாறு கூறினர்.

The post மாநகராட்சி கோரிக்கையை ஏற்று செல்லூர் கண்மாயில் உபரிநீர் வெளியேற்றும் புதிய திட்டம்: நிதியை உயர்த்த நீர்வளத்துறை கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: