உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் அனைத்து வகை பேருந்துகளும் நின்று செல்லும்: மண்டல பொது மேலாளர் தகவல்

உசிலம்பட்டி, நவ. 10: உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூரில், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து வகை பேருந்துகளும் நின்று செல்லும் என, மதுரை மண்டல அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் கூறியுள்ளார்.

உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தினசரி மதுரை, தேனிக்கு தொழில் ரீதியாகவும், விவசாய பொருட்களை விற்பனை செய்யவும் பேருந்துகளில் பயணிக்கும் நிலை உள்ளது. இதன்படி மதுரையிலிருந்து தேனி, போடி மற்றும் குமுளி வரை செல்லும் மற்றும் திரும்பி வரும் பேருந்துகள் வாலாந்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வதில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் அவதியடைந்து வந்தனர்.

இவர்கள் அனைவரும் தினசரி செல்லம்பட்டிக்கு ஆட்டோ அல்லது டூவீலர்களில் சென்று, அங்கிருந்து மதுரை, தேனி செல்லும் பேருந்துகளை பிடிக்கும் நிலை தொடர்ந்தது. இதையடுத்து, வாலாந்தூர் பேருந்து நிறுத்ததில் அனைத்து வகை பேருந்துகளும் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த பிரச்னை குறித்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், தலைமையில் நிர்வாகிகள், அரசு போக்குவரத்துக்கழக மதுரை மண்டல பொது மேலாளர் சதீஸ்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதன் எதிரொலியாக நேற்று முதல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து வகை பேருந்துகளும்வாலாந்தூர் பேருந்து நிறுத்ததில் நின்று செல்ல வேண்டும் என, பொது மேலாளர் சதீஸ்குமார் உத்தரவிட்டார்.

இதன் பேரில் பயணசீட்டு ஆய்வாளர்கள் அழகுராஜன், மருதன் ஆகியோர் நேற்று வாலாந்தூர் பேருந்து நிறுத்தம் வந்தனர். அவர்கள் அந்த வழியாக வந்த அரசுப் பேருந்துகளை நிறுத்தி, பொதுமேலாளரின் உத்தரவு குறித்து டிரைவர், கண்டக்டர்களிடம் கூறினர். இதையடுத்து பேருந்துகள் அனைத்தும் வாலாந்தூரில் பயணிகளுக்காக நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் திமுக நிர்வாகிகளுக்கும், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

The post உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் அனைத்து வகை பேருந்துகளும் நின்று செல்லும்: மண்டல பொது மேலாளர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: