துலுக்க சூடாமணியம்மன் கோயில் தேர்த்திருவிழா பக்தர்கள் உருளுதண்டம் போட்டு நேர்த்திக்கடன்

நாமகிரிப்பேட்டை, ஏப்.11: நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி துலுக்க சூடாமணி அம்மன் கோயிலில் தேர்திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது. .நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி துலுக்க சூடாமணி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி கடைசி வாரத்தில் தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு தேர்திருவிழா நேற்று வெகுவிமர்சையாக நடந்தது. இதையொட்டி, சேலம், நாமக்கல், தர்மபுரி, ஆத்தூர், கரூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர். இப்பகுதி விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளையும் மா, தேங்காய், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை  தேரின் மீது கட்டினால், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், தோட்டத்தில் விளைந்த பொருட்களை கட்டினர். ராசிபுரம் குற்றவியல் நீதிபதி மாலதி கலந்து கொண்டு, வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்தனர். அப்போது, தேரின் பின்னால், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் உருளுதண்டம் போட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில்  தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

சிறப்பு நீதிமன்றம்

துலுக்க சூடாமணியம்மன் கோயில், திருவிழாவையொட்டி இப்பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு நீதிமன்ற முகாம் அமைக்கப்பட்டு, திருவிழாவில் நடக்கும் குற்றங்களுக்கு உடனடி தண்டனை வழங்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் இப்பகுதியில் அதிகளவில் குற்றங்கள் நடந்துள்ளது. இதனை தடுக்கும் வகையிலும், குற்ற வழக்குகளை உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்கவும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, விசாரணை செய்து தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்டவை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: