விமானப்படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

 

நாமக்கல், மே 28: இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு இசைக்கலைஞர் பிரிவிற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்திய விமானப்படையால், அக்னிவீர் வாயு ராணுவத்தில், இசைக் கலைஞர் பிரிவிற்கு, பெங்களூருவில் அமைந்துள்ள 7வது ஏர்மேன் தேர்வு மையத்தில், வருகிற ஜூலை 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை இந்திய ராணுவம் மூலம் ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு திருமணமாகாத விருப்பமுள்ள ஆண், பெண் இருபாலரும் வருகிற ஜூன் 5ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் 2.1.2004 முதல் 2.7.2007 தேதிக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும், இசைக்கல்வியில் தேர்ச்சி பெற்றவராகவும், இந்திய பாரம்பரிய கருவிகளில் ஏதேனும் ஒரு இசை கருவியை வாசிப்பதில் வல்லுநராக இருக்க வேண்டும். இத்தேர்வு குறித்த விவரங்களை நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04286 -222260 மூலமோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post விமானப்படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: