பணித்தள பொறுப்பாளரை மாற்றக்கோரி 100 நாள் வேலைதிட்ட பயனாளிகள் மறியல் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம்

போச்சம்பள்ளி, ஏப்.10:  பாரூர் பஞ்சாயத்தில், பணித்தள பொறுப்பாளரை மாற்றக்கோரி, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், பெண்கள் உட்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்குட்பட்ட பாரூர் பஞ்சாயத்தில், சுமார் 800க்கும் மேற்பட்ட பயனாளிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகாளாக பணித்தள பொறுப்பாளராக ஒருவரே வேலை பார்த்து வருகிறார். இதனால், ஊதிய விகிதம் சமமாக கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும், அவரை மாற்றி வேறு ஒருவரை பணியமர்த்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை வலியுறுத்தி கடந்த வாரம் பாரூர் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளையில், பாரூர் பஞ்சாயத்திற்குட்பட்ட வெத்தலக்காரனூர், மோட்டுப்பட்டி பகுதியை இரண்டாக பிரித்து மேலும் ஒருவரை பணித்தள பொறுப்பாளராக நியமிக்க வேண்டுமென மற்றொரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே, தேர்தல் முடிந்த பின்புதான் நடவடிக்கை எடுக்க முடியும்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறி வந்த நிலையில், மோட்டுப்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார் தலைமையில் அரசம்பட்டி -பாரூர் சாலையில் பெண்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில், பாரூர் போலீசார் விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கலைந்து செல்லாததால் 32 பெண்கள் உள்பட 35 பேர் கைது செய்தனர். பின்னர், அவர்கள் வழிமறித்து நிறுத்திய பஸ்சிலேயே அனைவரையும் ஏற்றிச்சென்றனர். இதற்காக பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். அவர்கள் அனைவரும் குழந்தை, குட்டிகள் மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் நடந்தே சென்றது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், எங்கள் ஊரில் படித்த பெண்கள் உள்ளனர். எனவே, அவர்களில் ஒருவரையே பணித்தள பொறுப்பாளராக நியமிக்க வேண்டும். மேலும், எங்கள் பகுதியிலேயே வேலை செய்ய  வாய்ப்பளிக்க வேண்டும் என்றனர்.

Related Stories: